திரையுலகின் தவப்புதல்வன்
திரையுலகின் தவப்புதல்வன், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்: 248. விலை ரூ.175.
சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என அறிவுறுத்தும் திரையியல் ஆய்வு நூல் என்றே இந்நூலைக் கூறலாம். காரணம், சிவாஜியின் நடிப்பைப் பற்றி மட்டுமின்றி, சினிமாவின் தரம், இசை, பாடல்கள், தற்கால சினிமாவின் தரக்கேடு உள்ளிட்ட பல அம்சங்களும் இந்நூலில் அலசப்பட்டிருக்கின்றன.
தெய்வப்பிறவி, முதல் தேதி, ரங்கூன் ராதா ஆகிய படங்களில் சிவாஜியின் நடிப்புத் திறனை நூலாசிரியர் வர்ணித்திருக்கும் விதம், அப்படங்களைத் தேடிப்பிடித்து மீண்டும் நம்மை பார்க்கத் தூண்டுகிறது.
பழநி ஒரு தோல்விப்படம்தான்; ஆனால், ஓர் எளிய கிராமத்து விவசாயியின் குடும்பம் இந்த மண்ணில் வாழும் இறுதி நாள் வரை அது உயிர்ப்புடன் வாழும் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார். பாலும் பழமும், பாகப்பிரிவினை, படிக்காத மேதை போன்ற பா வரிசைப்படங்கள், உத்தம புத்திரன், தெய்வ மகன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், நவராத்திரி ஆகிய படங்களில் சிவாஜியின் நடிப்பை உச்சி முகர்ந்து பாராட்டுபவர், சிவாஜியின் சில படங்களில் மிகையான நடிப்பின் மூலம், பாத்திரத்தின் தன்மையைச் சிதைத்து விட்டதற்குச் சான்றுகள் பலவுண்டு என்று சாடவும் செய்கிறார்.
சினிமாவை விரும்பும் அனைவருக்குமே இது ஒரு மறக்க முடியாத நூலாக விளங்கும்.
நன்றி: தினமணி, 27/11/2017.