கீத கோவிந்தம்

கீத கோவிந்தம் (ஜெயதேவரின் கீத கோவிந்தம்- அஷ்டபதி விளக்க உரை), வ.ந.கோபால தேசிகாசாரியார், வானதிபதிப்பகம்,  பக். 216,  விலை ரூ150.

கிருஷ்ண பக்தரான ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தம் என்பது அஷ்டபதி என்றும் கூறப்படும். 12 சர்க்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு சர்க்கத்திலும் எட்டு பாடல்களைக் கொண்டும், ஒன்றிரண்டு பகுதிகளில் மட்டும் எட்டுக்கும் அதிகமான பாடல்களைக் கொண்டிருப்பதால் இந்தப் பகுதிகள் ‘அஷ்ட பதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. மொத்தம் 24 அஷ்டபதிகள் இந்தக் காதல் காவியத்தை அலங்கரிக்கின்றன.

வடமொழியில் செவிக்கு மதுரமான சொற்றொடர்களைக் கொண்ட இந்த கீதகோவிந்தம் கண்ணன்- ராதையின் காதல் விளையாட்டுக்களை மதுரமான காதல் காவியமாக்கித் தந்துள்ளது. மேலும், கண்ணன் கோபியர்களிடம் செய்த லீலைகள், பாகவதக் கதைகள், இதிகாச, புராணச் செய்திகள் எனப் பலவும் இதில் கூறப்பட்டுள்ளன.

நாயக-நாயகி பாவத்தில் கீத கோவிந்தம் அமைந்துள்ளது. இதைப் படிப்பவருக்கு ஏற்படும் பலன்களையும் ஜெயதேவர் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்.

என் பக்தர்கள் எங்கே என்னைப் பற்றிப் பாடுகிறார்களோ, எங்கே திவ்ய நாம பஜனை செய்கிறார்களோ அங்கே நான் இருப்பேன்' என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். இந்த கீத கோவிந்தத்தைப் பாடிப்பரவுவதன் மூலம் பகவானை விரைவில் நாம் நெருங்கமுடியும். அதை அஷ்டபதி நமக்குத் அளிக்கிறது.

ராதை மீது கண்ணன் கொண்ட அளப்பரிய காதல் அவஸ்தைகளை ஜெயதேவர் வர்ணித்துள்ளார். அப்பாடல்களுக்கான எளிய விளக்க உரையும் சிறப்பு. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றிணையும் விதமாக இந்தக் காதல் காவியம் அமைந்திருப்பதுடன், ஹரியின் மாண்புகளையும், ஹரி நாமத்தின் மகிமையையும் எடுத்துரைக்கும் அற்புதக் காதல் காவியமாகவும் திகழ்கிறது.

நன்றி: தினமணி, 27/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *