அதுவும் இதுவும்
அதுவும் இதுவும், டாக்டர் க.விஜயகார்த்திகேயன் I.A.S., விஜயா பதிப்பகம், பக். 152, விலை 120ரூ.
மருத்துவக் கல்வியை முடித்து ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்று, தற்போது கோவை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாளராகவும், பண்பட்ட பேச்சாளராகவும் விளங்குபவர். இவர் ஏற்கெனவே எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்., விடை பாதி எழுதும் பாணி பாதி என்ற இரு நூல்களையும் எளிய தமிழ் நடையில், அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதும் அரசுத் தேர்வாணைய மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூல்களாகப் படைத்து, நல்ல பாராட்டைப் பெற்றவர்.
இந்நூலில் இளைய தலைமுறையினரிடம் நல்ல கலாசாரம் உருவாவது வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது என்ற நோக்கில் நற்சிந்தனைகளைத் தூண்டும் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். ஒவ்வொரு மனிதனுக்கும், பல குணாதிசயங்கள் உண்டு. அவற்றைக் கொண்டே அவன் நல்லவனா, கெட்டவனா என்று அடையாளம் காணமுடிகிறது. ஆக, நம் குணங்கள்தான் சமுதாயத்தில் நமக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குகிறது. இதன் அடிப்படையிலேயே நல்ல கலாசாரமும் உருவாகிறது என்கிறார் ஆசிரியர்.
எல்லா மனிதர்களிடமும் விருப்பு வெறுப்பு, பொறுமை ஆத்திரம், நம்பிக்கை மூடநம்பிக்கை, பலம் பலவீனம் என்று பல எதிர் எதிர் விஷயங்களும், நட்பும் நன்றியும், அறிவும் ஞானமும், சிரிப்பும் சந்தோஷம் என்று பல நேர்மறை விஷயங்களும் உண்டு. இவற்றையெல்லாம் அதுவும் இதுவும் என்ற வகையில் விளக்கி, இவற்றில் நாம் எதைக் கைக்கொள்வது, எதைக் கை விடுவது என்ற விபரங்களை அனுபவரீதியாகவும் பல்வேறு குட்டிக்கதைகள் மூலமும் எடுத்துக் கூறுவது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த வகையில் இந்நூலில் 14 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 9/5/2018.