யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம்

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 160ரூ.

சீனாவிலுள்ள புத்தமத நூல்கள் பலவற்றிலுமுள்ள முரண்பாடுகளைக் கண்டு, புத்தர் அவதரித்த இந்தியாவிற்கே சென்று உண்மை நிலையை அறிய விரும்பி, கி.பி.629-ல் பயணத்தை மேற்கொண்டவர் சீனத் துறவி யுவான் சுவாங். 20 வயதிலேயே தனது நாட்டை விட்டு வெளியேறி, காடுகள், மலைகள், பாலைவனம், சீதோஷ்ணம், காட்டு விலங்குகள், கெள்ளையர் கூட்டம்… என்று பல இடர்களையும், தடைகளையும் கடந்து கால்நடையாகவே இந்தியாவிற்குள் வந்தார்.

பாடலிபுத்திரத்திலுள்ள நாளந்தா பல்கலைக் கழகத்தில் புத்தமதத் தெளிவைப் பெற்றார். வட இந்தியாவில் அப்போதைய பேரரசர் ஹர்ஷருடன் நட்பு கொண்டு, அவரையும் புத்த மதத்தைத் தழுவச் செய்தார். இவர் இந்தியாவில் எங்கெங்கு பயணம் செய்தார், எத்தகைய அனுபவங்களைப் பெற்றார், கி.பி.7-ஆம் நூற்றாண்டில் இந்தியா எத்தனை சாம்ராஜ்யங்களாக இருந்தன, எந்தெந்தப் பகுதியை யார் யார் ஆண்டனர், அந்த ஆட்சிகளின் தன்மைகள், இந்திய கலாசாரம், புத்தர் காலத்தில் புத்தரால் நிகழ்ந்த சம்பவங்கள்… என்று நமது நாட்டைப் பற்றிய பல்வேறு சரித்திரக் குறிப்புகளை முதன் முதலில் பதிவு செய்து வழங்கினார்.

அந்த வகையில் தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்திற்கு புத்தபிரான் வருகை தந்தது, அங்கு அசோகச் சக்கரவர்த்தி 100 அடி பௌத்த ஸ்தூபியை எழுப்பியது, இந்நகரைச் சேர்ந்த தர்மபாலர் என்ற புத்த பிட்சுதான், நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக திகழ்ந்தது… என்று பல தகவல்களையும் அந்த சரித்திரக் குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

இப்படி நமது நாட்டைப் பற்றி யுவான் சுவாங் திரட்டிய பல்வேறு தகவல்களை, படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்நூலில் ஆசிரியர் தொகுத்துள்ளது சிறப்பானது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 13/6/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *