மகாபாரதம் – மாறுபட்ட கோணத்தில்
மகாபாரதம் – மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், பக்400, விலை ரூ.200.
வேதவியாசரால் எழுதப்பட்ட மகாபாரதம் ஓர் இதிகாசம். ஒவ்வொரு மனிதரும் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்பிக்கிறது. நம்ப முடியாத பல சம்பவங்களும் கிளைக்கதைகளும் இதில் உள்ளன. மகாபாரதத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் இன்றைக்கும் நாம் பல உருவங்களில் காணமுடிகிறது என்பதுதான் வியப்பு. அதுமட்டுமல்ல, கலியுகத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதை அன்றைக்கே பட்டியலிட்டிருக்கும் வேதவியாசர் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான்.
துரியோதனனை தீயவன் என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. அதே சமயம் யுதிஷ்டிரனை முழுமையான தர்மவானாக ஏற்றுக்கொள்ள முடியாது.
குந்தி பெற்ற வரங்களை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல கிருஷ்ணனை கடவுளாகச் சித்திரித்திருப்பதையும் முழுமையாகக் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், அவன் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சிறந்த மனிதன்- பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் நிற்பவன். அவரைக் கடவுளின் நிலையில் வைத்துப் பார்க்க விரும்புபவருக்கு இந்நூல் எந்தத் தடையும் விதிக்கவில்லை' என்று கூறும் நூலாசிரியர், கற்பனைகளை ஒதுக்கிவிட்டு, எது மனித முயற்சியால் நடந்திருக்க முடியுமோ, அதை மட்டுமே எழுதியிருக்கிறேன் என்கிறார்.
எதுவும் உன் கையில் இல்லை; உன்னைக் காலத்திடம் ஒப்படைத்துவிட்டு உன் கடமைகளை சரிவர, ஆனந்தமாகச் செய்' என்பதுதான் மகாபாரதத்தின் சாரம். வாழ்க்கை என்பது மாயை என்பதும், அதை எப்படி ஆனந்தமயமாக்குவது என்பதும், பாரதத்தின் மாறுபட்ட கோணமும் இந்நூலை முழுமையாகப் படிப்பவர்க்கே புலப்படும்.
நன்றி: தினமணி, 10/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818