வெற்றி உங்களுடையதே
வெற்றி உங்களுடையதே, பி.வி.பட்டாபிராம், யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.308, விலை ரூ.250.
வழக்கமாக வெளிவரும் சுயமுன்னேற்ற நூல்களிலிருந்து பெரிதும் வேறுபடும் நூல். சமுதாய நிகழ்வுகள் தனிமனிதனைப் பாதிக்கின்றன. அதையும் மீறி தனிமனிதன் முன்னேற வேண்டியிருக்கிறது. சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிகளைச் செய்து கொண்டே, மனதளவில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறும் நூலாசிரியர், வழிகளாகத் தேர்வு செய்திருப்பது மனிதனின் மனதை மாற்றும் முயற்சிகளையே.
மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? மனதில் ஏற்படும் பல்வேறுவகையான காம்ப்ளக்ஸ்களில் இருந்து எவ்வாறு மனிதன்விடுபட வேண்டும்? மனதை எவ்வாறு ரிலாக்ஸ் செய்ய வேண்டும்? பயம், தோல்வி மனப்பான்மை, தீய பழக்கங்கள் ஆகியவற்றை விட்டொழிக்க என்ன செய்ய வேண்டும்? என எல்லாவற்றுக்கும் உளவியல்ரீதியான ஆலோசனைகளை இந்நூல் தருகிறது.
ரிலாக்ஸ் செய்து கொள்வது என்றால் பொதுவாக எல்லாரும் எல்லாப் பிரச்னைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு வெறுமனே இருப்பது என்றுதான் நினைப்பார்கள்.
சுய ஹிப்னாடிசம் செய்து ரிலாக்ஸ் ஆகும் வழிமுறைகளை நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். ஞாபக மறதியை நீக்க, ஞாபக மறதி அதிகமாகிறது எனும் எதிர்மறை எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்று கூறும் நூலாசிரியர், ஞாபகசக்தியை வளர்த்துக் கொள்வதற்கான உளவியல் வழிமுறைகளைக் கூறுகிறார். மாணவர்கள், இளைஞர்கள், வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள இந்நூல் உதவும்.
நன்றி: தினமணி, 24/6/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818