மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள்
மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள் – பாகம் 1, டி.எஸ்.தியாகராசன், நர்மதா பதிப்பகம், பக்.240. விலை ரூ.225.
மத நல்லிணக்கம், கல்வித்துறை மேம்பாடு, நெகிழியால் வரும் கேடு, இலவசங்களால் அரசுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, நீதிமன்றங்களின் வித்தியாசமான தீர்ப்புகள், நதிநீர்ப் பிரச்னையில் மாநிலங்களுக்கிடையே நிகழும் மோதல்கள், பொதுத்துறை தனியார்மயமாவதில் உள்ள சாதக, பாதகங்கள் – இவ்வாறு பல்வேறு பொருண்மைகள் குறித்து எழுதப்பட்ட முப்பத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
அண்ணல் காந்தியடிகள் குறிப்பிட்ட “ஏழு பாவங்களும்’ இன்றுவரை சமுதாயத்தைவிட்டு நீங்கவில்லை என்பதில் தொடங்கி, கரோனா தீநுண்மி காலத்தில் மனிதர்கள் மனிதத்தன்மையை இழந்துவிட்டார்கள் என்பது வரை சமூக நோக்கமுள்ளவையாகவே எல்லாக் கட்டுரைகளும் அமைந்துள்ளது சிறப்பு.<br>
சமூகப் பிரச்னைகளைக் குறிப்பிடுவதோடு நின்றுவிடாமல், அவற்றின் தீர்வுக்கானயோசனைகளையும் முன் வைக்கிறார் நூலாசிரியர்.
உதாரணமாக, காவிரிநீர்ப் பங்கீடு இரு மாநிலங்களுக்கிடையே பகைமையை உருவாக்கி வரும் சூழலில், ” டெல்டா விவசாயிகள் இஸ்ரேல் நாட்டு நீர் மேலாண்மைத் திட்டத்தையும், மாற்றுப் பயிர்முறைகளையும் கைக்கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார். கல்வித்துறையில் சீர்திருத்தம் தேவை என்பதைக் குறிப்பிடுகையில் “அறிவை விசாலமாக்கி அருங்குணங்களை வளர்க்கவல்ல பண்பாட்டுக் கல்வியை பாடத்திட்டத்தில்சேர்க்க வேண்டும்’ என்கிறார்.
பில்லியர்ட்ஸ் விளையாட்டுக்கான பந்துகள் யானைத் தந்தங்களால் உருவாக்கப்பட்டதும், பின்னர் யானைத் தந்தத்துக்கு மாற்றாக நெகிழி கண்டுபிடிக்கப்பட்டதும் வியப்பளிக்கும் செய்தி.<br>
கட்டுரைகளுக்கான களங்கள் மாறுபட்டிருந்தாலும் இவற்றின் அடிநாதமாக சிறுமை கண்டு பொங்கும் அறச்சீற்றமே உள்ளது.
இக்கட்டுரைகள் அனைத்துமே “தினமணி’யில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமணி, 6/9/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818