காந்தி என்கிற காந்தப்புலம்
காந்தி என்கிற காந்தப்புலம், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.140, விலை ரூ.138.
தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் குறித்து எழுதப்பட்ட இருபது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
தென்னாப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிய கண்டத்தினர் தங்கள் சுயவிவரங்களைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தார், அப்போது அங்கு பாரிஸ்டராக இருந்த மகாத்மா காந்தி. அந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் கைக்கொண்ட முறையே பிற்காலத்தில் சத்தியாகிரகம் எனப் புகழ்பெற்றது என்பதை ஒரு கட்டுரை விவரிக்கிறது.
காந்திஜி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வெள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டது (1897), ஜோஹன்னஸ்பர்க் நகரில் மிர் ஆலம் என்ற பட்டாணியனால் தாக்கப்பட்டது (1908), டர்பன் நகரில் பொதுக்கூட்ட மேடையில் தாக்கப்பட்டது (1908), இந்தியாவின் புணே நகரில் காந்திஜி பயணம் செய்த கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது, காந்திஜி பயணம் செய்த ரயிலைக் கவிழ்ப்பதற்காக ரயில் பாதையில் பாறாங்கல் வைக்கப்பட்டது, தில்லியில் அவர் உண்ணாவிரதமிருந்தபோது அவரை நோக்கி கை வெடிகுண்டு வீசப்பட்டது – இப்படி காந்திஜி எதிர்கொண்ட தாக்குதல்களைப் பட்டியலிடுகிறது கட்டுரை ஒன்று.
மகாத்மா காந்தியும், வின்ஸ்டன் சர்ச்சிலும் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பேசியதில்லை. அது ஏன் என்பதை விவரிக்கிறது ஒரு கட்டுரை.
இந்தியா விடுதலையடைந்த 1947 – ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடினார், காந்திஜியின் இறுதி நாளில் நிகழ்ந்தவை எவை என்பனவற்றையெல்லாம் இக்கட்டுரைத் தொகுப்பின் மூலம் அறிய முடிகிறது. மகாத்மா காந்தியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய தேசம் குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள இந்நூல் ஒரு சிறந்த கையேடாகும்.
நன்றி: தினமணி 15/11/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818