சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி. ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200.
டாக்டர் அம்பேத்கர் பற்றிய எண்ணற்ற நூல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அம்பேத்கரின் மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப்படும் இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தைப் பற்றி மிகச் சிறப்பாக இந்நூலில் விவரித்துள்ளார் நூலாசிரியர்.
“டாக்டர் அம்பேத்கர் அன்ட் த மேக்கிங் ஆஃப் த இந்தியன் கான்ஸ்டிடியூஷன்’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். நூலாசிரியர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு, அரசியல் சட்ட உருவாக்கத்தைப் பிரதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அரசியல் சாசன அவையின் முதல் கூட்டத்தில் பேசும்போதே பிரெஞ்சு அரசியல் அவை வெளியிட்ட மனித உரிமைகள் அறிவிக்கை வெளியாகி 450 ஆண்டுகளாகின்றன என்று ஒப்பிட்டு மனித உரிமைகள் குறித்தான தனது அக்கறையை வெளிப்படுத்துகிறார் அம்பேத்கர்.
கிழக்கு வங்கம் பிரிக்கப்பட்டபோது, சாசன சபையில் உறுப்பினர் தகுதியை இழந்த அம்பேத்கரை மீண்டும் கொண்டு வர பாபு ராஜேந்திர பிரசாத்தும் சர்தார் வல்லபபாய் பட்டேலும் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதையும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
நாடு விடுதலை பெற்றதும் முதல் சட்ட அமைச்சராக்கப்பட்ட அம்பேத்கர், தொடர்ந்து அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவராகவும் தெரிவு செய்யப்படுகிறார்.
சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்காக சபையில் எத்தகைய வாதங்களை அம்பேத்கர் முன்வைத்தார் என்பனவற்றையெல்லாம் விரித்தெழுதும் இந்த நூல், அரசியல் சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் பற்றிய அனைத்து வாசகர்களுக்கும் உரிய, விளக்கமான – தெளிவான அறிமுகமாக மலர்ந்திருக்கிறது.
நன்றி: தினமணி, 27/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000026652_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818