நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: இரா.காமராசு, சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.315.
2017 – ஆம் ஆண்டு வரலாற்றியல் ஆய்வறிஞர் நா.வானமாமலையின் நூற்றாண்டு உரையரங்கம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடத்தப்பட்டது. அந்த உரையரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றிய நா.வானமாமலை, ஆசிரியர் பணியைத் துறந்து சொந்தமாக “ஸ்டூடன்ட்ஸ் டுட்டோரியல் இன்ஸ்டிடியூட்’ என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். அது பின்னர் “வானமாமலை தனிப்பயிற்சி நிறுவனம்’ என்று மாறியது.
1967 – இல் அவர் “நெல்லை ஆய்வுக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் பங்குபெற்றவர்கள் தமிழிலக்கியம், வரலாறு தொடர்பான ஆராய்ச்சிகள் செய்தனர். வரலாறு, தத்துவம், இலக்கியம் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டன. அவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் நா.வானமாமலையின் “ஆராய்ச்சி’ இதழில் வெளியிடப்பட்டன. நெல்லை ஆய்வுக் குழுவில் பங்கேற்ற பலர் பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்களாகத் திகழ்ந்தனர். பல்கலைக்கழகங்களுக்கு வெளியே சிறப்பான ஆராய்ச்சிப் பணிகளை நெல்லை ஆய்வுக் குழு செய்தது.
நா.வானமாமலை பழந்தமிழ் இலக்கியங்கள், வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் ஆகியவற்றுடன் மட்டும் தனது எல்லைகளைச் சுருக்கிக் கொள்ளாமல் எக்சிஸ்டென்ஷியலிசம், சர்ரியலிஸம், ஃப்ராய்டிசம் ஆகியவை குறித்த தனது விமர்சனப்பூர்வமான தெளிவான கருத்துகளையும் முன் வைத்தார்.
அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட நா.வானமாமலை, ஐவர்ராஜா கதைப்பாடல், வீணாதிவீணன் கதை, பட்டவராயன், சின்னத்தம்பி, கட்டபொம்மன் கதைப் பாடல் ஆகியவற்றைப் பதிப்பித்தார்,
ரப்பரின் கதை, காகிதத்தின் கதை, உயிரின் தோற்றம், விஞ்ஞானத் தொழில் புரட்சி உள்ளிட்ட சிறுவர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அறிவியல் நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.
.வானமாமலையின் அரிய ஆராய்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், தமிழ் அறிவுலகில் அவை ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவும் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 27/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818