ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்
ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம், விஜய் மகேந்திரன், புலம் வெளியீடு, விலை: ரூ.150.
தமிழ் சினிமா இசையை சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை, திரைப்பயணம் குறித்த அறியப்படாத, சுவாரஸ்யமான, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களால் நிரம்பியுள்ளது ‘ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்’ நூல். தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த திலீப்பாக இருந்த காலம்தொட்டு, ரஹ்மானை ஒரு ரசிகராகப் பின்தொடர்ந்துவரும் விஜய் மகேந்திரன், ரசனையைத் தாண்டி ஒரு பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய சமநிலை நோக்குடன் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழ், இந்தி, சர்வதேச மொழித் திரைப்படங்களில் ரஹ்மானின் இசைச் சாதனைகளும் அவருடைய ஆளுமைப் பண்புகளும் இதழியல் நெறிகளை மீறாத பாராட்டுணர்வுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆதாரபூர்வமான தகவல்கள், ரஹ்மானின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், உடன் பணியாற்றியவர்களின் மேற்கோள்கள் விரிவாக எடுத்தாளப்பட்டிருப்பது கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு வலுசேர்க்கின்றன. பாடலாசிரியர்களுடனான ரஹ்மானின் பணி அனுபவங்கள் குறித்த விவரிப்புகள் ரஹ்மானின் தமிழ் மொழி ஆளுமை, அக்கறை குறித்த கற்பிதங்களைத் தகர்ப்பனவாக அமைந்துள்ளன.
வாலி, வைரமுத்து போன்ற மூத்தவர்களுடன் தொடர்ந்து பணியாற்றியதைப் போலவே இளைஞர்களுடன் பணியாற்றவும் புதியவர்களை அறிமுகப்படுத்தவும் ரஹ்மான் தயங்கியதில்லை.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவந்த கவிஞர் தேன்மொழி தாஸ், ‘கண்களால் கைது செய்’ படத்தில் ‘தீக்குருவி’ பாடலை எழுத நேர்ந்தது அப்படித்தான். மிகவும் மாறுபட்ட சந்த அமைப்பைக் கொண்ட அந்தப் பாடல், ரஹ்மானின் இசை மேதமைக்கான சான்றுகளில் ஒன்றாக இன்றும் முன்னிறுத்தப்படுகிறது. அப்படி ஒரு மெட்டுக்குப் புதியவர் ஒருவரை வைத்து எழுதிப் பார்த்த வரிகள் பிடித்துப்போகவே அதையே பாடலாக ஆக்கிவிட்டார் ரஹ்மான்.
திரையிசையைத் தாண்டி ‘வந்தே மாதரம்’ ஆல்பம், ‘பாம்பே ட்ரீம்ஸ்’ நாடகம் தொடங்கி ‘கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி’ இசைப் பள்ளி வரை ரஹ்மானின் மற்ற இசைப் பணிகளுக்கும் இந்நூலில் உரிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தனது பெயரை வைத்து ரசிகர்களை ஏமாற்றும் இசை வணிகம் சார்ந்த முயற்சிகள் சிலவற்றை, அவரே முன்வந்து பொதுத்தளத்தில் உண்மையை வெளிப்படுத்தி ரசிகர்கள் ஏமாறுவதைத் தவிர்க்க முயன்றிருக்கிறார் ரஹ்மான். ஒரு மனிதராக அவர் மீதான மரியாதையை அதிகரிக்கும் இதுபோன்ற நிகழ்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
ரஹ்மான் நேசர்கள், இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒரு எளிய பின்னணியிலிருந்து வந்து உலகை வியக்க வைத்ததோடு, தான் சார்ந்த துறையின் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்புகளை ஆற்றிய அரிதான ஆளுமையைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
நன்றி: தமிழ் இந்து, 20/2/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031032_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818