ஆதிசைவர்கள் வரலாறு
ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ்.கார்த்திகேய சிவம், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ.

சிவனோடு தொடர்புடையது சைவம். "சைவத்தின் மேல் சமயம் வேறில்லை' என்பது சைவர்களின் உறுதியான நம்பிக்கை. சிவனை வணங்கும் யாவரும் சைவர்களேயாயினும் இறைவன் திருமேனியை முப்போதும் தீண்டி பூஜை செய்து வழிபடுவோரை "ஆதிசைவர்' என அழைப்பது மரபு. ஆதிசைவர்கள், குருக்கள், பட்டர், நாயனார், சிவாச்சாரியார் என வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட ஆதிசைவர்களின் வரலாற்றை ஓரளவு விரிவாகவும் மிகத்தெளிவாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். திருக்கயிலாய மலையில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஆகமங்களை உபதேசம் செய்ததில் தொடங்கி, சிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றியவிதம், ஆகமங்களின் பிரிவுகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவற்றின் விளக்கம், ஆதிசைவரே தன்னளவில் ஆத்மார்த்த பூஜையும், திருக்கோயில்களில் பரார்த்த பூஜையும் செய்ய வேண்டியவர்கள் என்பதற்கான நூலாதாரங்கள், ஆதிசைவர் என்போர் தமிழர்களே என்பதற்கு மறைமலையடிகள், கா.சு. பிள்ளை போன்றோரது கருத்துகள் மூலமான விளக்கம், ஆதிசைவ சமூகத்தினர் வடமொழிக்கும், தமிழுக்கும் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்புகளை உரிய தரவுகளோடு நிறுவியுள்ளமை, சைவத்தையும் தமிழையும் பக்தியையும் வளர்த்திட ஆதிசைவர்கள் அமைத்த திருமடங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்தளித்தல் – இவ்வாறு பல அரிய தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. மேலும், கடந்த சில நூற்றாண்டுகளாக ஆதிசைவர்கள் இருந்த நிலையையும், தற்போது சமூகத்தில் அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் இடத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளது சிறப்பு.
சோழ மன்னர்களுக்கும், பல்லவ மன்னர்களுக்கும் சிவாச்சாரியார்களே ராஜகுருவாக இருந்துள்ளனர் என்பதும், திருவாரூர் கோயிலை பிரெஞ்சு தளபதி லாலி சூறையாடியபோது பொருள் எதுவும் கிட்டாததால் அக்கோயிலில் பூஜை செய்துகொண்டிருந்த குருக்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான் என்பதும் புதிய செய்திகள். நூலின் இறுதிப் பகுதியில் ஆதிசைவர் மரபில் அவதரித்த அருளாளர்களின் பட்டியல் தரப்பட்டிருப்பது பயனுள்ளது.
‘பன்னிரு திருமுறை’, ‘மெய்கண்ட சாத்திரங்கள்’ போன்ற பல நூல்களையும் ஆய்வு செய்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல், ஆதிசைவ சமூகத்தினருக்கு ஒரு பொக்கிஷம்; மற்றவர்களுக்கு, ஒரு சமூகத்தின் உண்மை வரலாற்றை அறிய உதவும் கையேடு.
நன்றி: தினமணி, 14/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737236.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818