புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்., மணவை பொன்.மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், பக். 376, விலை ரூ.270.
எம்.ஜி.ஆரின் திரையுலக அனுபவங்களையும், அரசியல் அனுபவங்களையும் ஏராளமான தகவல்களுடன் அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
சிறுவயதில் நாடகத்துறையில் நுழைந்து நடிப்புப் பயிற்சியை காளி என். ரத்தினத்திடமும், நடனப் பயிற்சியை ஸ்ரீ ராமுலுவிடம் பெற்று ‘ராஜபார்ட்‘ ஆக உயர்வடைய எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள், திரைத்துறையில் நுழைவதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, சிலம்பம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டும் கூட சிறு சிறு வேடங்களே கிடைக்க, தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் பட்ட சிரமங்கள் என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு.
எம்.ஜி.ஆரின் தாய்ப்பாசம், குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் அவர் வைத்திருந்த அன்பு, அவரின் அபாரமான நினைவாற்றல், கண்டிப்பு, துணிச்சல், நேர்மை, ஆளுமை, தியாகம், மன்னிக்கும் குணம் போன்ற பல்வேறு பண்புகளை வெளிப்படுத்தும் எண்ணற்ற நிகழ்வுகள் நூல் முழுவதும் ததும்பி நிற்கின்றன.
காமராஜர், பெரியார், அண்ணா, கருணாநிதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் ஆகியோர் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கூறியிருக்கும் உயர்வான கருத்துகள்; எம்.ஜி.ஆரின் மறைவின்போது பல்வேறு இதழ்களில் வெளிவந்த புகழஞ்சலிகள்; எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற சிறப்பான பாடல் வரிகள், அரசியல் வசனங்கள்; கவிஞர்கள் வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து, பிறைசூடன் ஆகியோர் எம்.ஜி.ஆர். குறித்து எழுதியுள்ள கவிதைகள்; எம்.ஜி.ஆர். நடித்த படங்கள், அவர் நடித்த படங்களுக்குப் பாடல்கள் எழுதிய கவிஞர்கள், கதை- வசனம் எழுதியவர்கள் ஆகியோரின் பட்டியல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அபூர்வமான புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கிறது.
நன்றி: தினமணி, 14/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818