அடையாளம் தேடி
அடையாளம் தேடி, மு. வித்யா பெனோ, சந்தியா பதிப்பகம், பக். 72, விலை 80ரூ.
ஆற்றங்கரை, திருவிழா, கோவில் படித்துறை இங்கெல்லாம் சந்தித்து காதலர்கள் காதல் வளர்த்த காலம் மலையேறி விட்டது. அலைபேசி, வாட்ஸ் ஆப், இணையம் வழியாகத்தான் இப்பொழுது காதல் வழிகிறது. அப்படி வழியும்பொழுது, அவர்கள் அருகில் இருப்பவர்களை, பல நேரம் சங்கடத்தில் தான் ஆழ்த்துகிறது.
அதனை,
‘சிநேகிதியின் தூக்கத்தையும் / சேர்த்து கெடுக்கிறது / நம் செல்போன் முத்தங்கள்’
என்று அழகாக பதிவு செய்திருக்கிறார் வித்யா பெனோ.
வாழை இலை காற்றில் ஆடுகிறது. காற்றில் ஆடினால் கிழியத்தானே செய்யும்; அது இயல்பு; ஆனால் வித்யாவுக்கு அந்த காற்றின் மீது கோபம் வருகிறது. கூடவே சமூகத்தில் நிகழும் பாலியல் சம்பவங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அதை எண்ணி அந்த வாழை இலை நாராய் கிழிந்து மடிவதாய் இரண்டையும் இணைத்து ஒரு கவிதையை கட்டியிருக்கிறார்.
அந்தக் கவிதை,
பெண்ணிற்கே நீதியில்லா / சமூகத்தில் சலித்து / தன்னைக் கெடுத்த தென்றலை / தண்டிக்காது விட்டது / நாராய் கிழிந்து / வீணாய் போன வாழை இலை!
இப்படி பெண்மை, சமூகம், காதல் பேசும் கவிதைகள் இந்த நூலில் கலந்து இடம்பெற்றுள்ளன.
-சூர்யா.
நன்றி: தினமலர், 17/7/2016.