அக்கா
அக்கா, ஏ.எஸ்.பொன்னம்மாளின் சட்ட மன்ற சரிதம், திலகபாமா, காவ்யா, பக்: 586, விலை ரூ.600.
பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, ஓர் ஆதிதிராவிடர் நல விடுதியில் வார்டனாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் அரசியலில் நுழைந்து ஏழு முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து சாதனை படைத்த ஏ. எஸ். பொன்னம்மாளின் வாழ்க்கை வரலாறு, சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்த நூல்.
1957-இல் முதன்முதலாக நிலக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றது, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, மு. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று பல முதல்வர்களோடு பழகிய அனுபவங்கள், மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதில் அடம்பிடித்து அவர் காட்டிய திடம், அவரின் விடா முயற்சியால் உருவான மாவூத்து அணைக்கட்டு, நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி, சோழவந்தான், பழனி போன்ற பகுதிகளில் உருவான குளங்கள், பாலங்கள், சாலைகள் என அனைத்தின் பின்னணியிலும் பொன்னம்மாளின் தீவிர உழைப்பு அடங்கி உள்ளது.
ஜப்பானில் வளரும் புல் வகை இங்கேயும் வளர வேண்டும் என்று அவர் காட்டிய ஆர்வம், கால்நடை காப்பீடு, விவசாய விளைபொருள் காப்பீடு போன்ற திட்டங்கள் ஆகியவை தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண்ணாக அவரைச் சித்திரிக்கின்றன.
சட்டப்பேரவைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்பட்ட அவரது உரையாடல்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அரை நூற்றாண்டு தமிழக அரசியலின் வேறொரு பக்கத்தை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.
நன்றி: தினமணி, 4/10/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818