அந்தக் காலப் பக்கங்கள்
அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை: ரூ.200.

வரலாற்றை நூல்களிலும் நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பழங்கால வழிபாட்டுத் தலங்களிலும் மட்டுமல்ல, பலரது வீட்டு டிரங்குப் பெட்டிகளிலிருந்தும் பரணிலிருந்தும் தேடி எடுத்து எழுதலாம். உ.வே.சா. உள்ளிட்டோர் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் பலவற்றையும் அப்படித்தான் மீட்டெடுத்தார்கள். இன்று நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் ஒரு சுவரொட்டிகூட நாளை மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகலாம்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு பலருக்கும் அபிமானமாக இருந்த பாட்டுப் புத்தகங்கள் இந்தக் காலத்தில் ஆவணங்களாக மாறியுள்ளன. பாட்டுப் புத்தகங்களுக்கும் முன்னோடியாக குஜிலி இலக்கியங்கள் இருந்திருக்கின்றன. இவ்வகைத் துறையில் ஆய்வாளர்கள் அ.கா.பெருமாள், ஆ.இரா.வேங்கடாசலபதி போன்றோர் முக்கியமான பங்களிப்புகள் செய்திருக்கிறார்கள்.
ஆய்வாளர் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது என்றாலும் ஆய்வும் ஆர்வமும் ரசனையும் சேர்ந்த ஒரு கலவையாக இந்தத் திசையில் காலடி எடுத்துவைத்திருக்கிறார் அரவிந்த் சுவாமிநாதன். அவரது ‘அந்தக் காலப் பக்கங்கள்’ என்ற இந்த நூல், தமிழ் வாழ்வின் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி இரண்டின் சுவாரசியமான பல்வேறு அம்சங்களை முன்வைக்கிறது.
அந்தக் காலத்தில் வெளியான விசித்திரமான நூல்கள், அஷ்டாவதானிகள், சதாவதானிகள், சமயம் தொடர்பான சர்ச்சைகள்-வழக்குகள், சித்திரகவி என்று முதல் கட்டுரை பேசுகிறது. ‘விகடகவி’ என்ற சொல்லைப் போலத் திருப்பிப் படித்தாலும் ஒரே மாதிரி வரும் இந்தப் பாடல், தமிழ் எப்படிப்பட்ட சாத்தியங்களையெல்லாம் கொண்டிருந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு:
வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ
நாறு சமாகய நாடுர வேள்கவி பாடுறமா
மாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா
வீறுத வேயவ மானம வாவல மேலறவே
(அரசஞ்சண்முகனார், மாலை மாற்று)
துப்பறியும் புதினங்களை எழுதியவராக அறியப்பட்ட வடுவூர் துரைசாமியின் அறியப்படாத ஒரு பக்கம் பற்றிப் பேசுகிறது ‘வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி’ என்ற கட்டுரை. எகிப்துக்குத் தென்னாட்டிலிருந்து சென்றவர்கள் வடகலை ஐயங்கார்கள்தான் என்று உறுதியாக நம்பிய வடுவூர் துரைசாமி எகிப்துப் புராணங்கள், வரலாறு போன்றவற்றைப் பற்றிப் படித்துவிட்டு ‘Long Missing Links’ என்ற 800 பக்கப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதனால், பெருநஷ்டமடைந்த வடுவூர் துரைசாமி வீட்டை விற்றுக் கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு ஆளானதாகப் புலம்பியிருக்கிறார்.
‘ஓலைச்சுவடி’ என்ற தலைப்பிலான கட்டுரை பல வகையான சுவடிகளைப் பற்றிப் பேசுகிறது. சுவடிகளிலிருந்து சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தபோது, ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு அடிக்கும் உ.வே.சா. செலுத்திய உழைப்பைப் பற்றியும் இந்தக் கட்டுரை பேசுகிறது. 1887-ல் உ.வே.சா. பதிப்பித்த ‘சீவகசிந்தாமணி’க்கும் முன்பே 1883-ல் புதுக்கோட்டை அரங்கசாமி ‘சீவகசிந்தாமணி’யைப் பதிப்பித்திருப்பதாக புலவர் பூ.முருகேசன் விளம்பரம் செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், உ.வே.சா. பதிப்பில் நிறையப் பிழைகள் இருந்ததாகக் கூறி ‘சீவகசிந்தாமணி வழுப்பிரகணம்’ என்ற நூலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தக் கட்டுரையில் இலக்கியம், புராணம், தத்துவ விளக்கங்கள், ஜோதிடம், மாந்திரீகம், மருத்துவம் போன்றவை தொடர்பான சுவடிகளைப் பற்றி அரவிந்த் பேசுகிறார். குறிப்பாக, ‘குடிசை திவால்’ என்ற சுவடி குறித்த தகவல்கள் விநோதமானவை. பிடிக்காதவர்கள் வீட்டுக் குடிசையை எரிப்பதற்கெல்லாம் மாந்திரீகச் சுவடிகள் எழுதப்பட்டிருக்கின்றன.
அந்தக் கால விளம்பரங்களைப் பற்றி ஒரு கட்டுரை விரிவாக அலசுகிறது. அந்தக் காலத்திலிருந்தே சமூகத்துக்கு ‘ஆண்மை’ என்பது எப்படி ஒரு மையப் பொருளாக இருந்திருக்கிறது என்பதை அப்போதைய விளம்பரங்கள் மூலம் அறிய முடிகிறது. விளம்பரங்களை உருவாக்குபவர்கள் தேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள். அவர்கள் மக்களின் மனம் எப்படிச் சிந்திக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமல்ல, மக்களின் மனம் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர்களும்கூட. அந்தக் கால விளம்பரங்களைப் பார்க்கும்போது, இது தெளிவாகத் தெரிகிறது. பொருட்கள், மருந்துகள் பற்றி மட்டுமல்ல திரைப்பட விளம்பரங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரை சுவைபடப் பேசுகிறது.
நாடி ஜோதிடம் பற்றிய கட்டுரை அதனைப் பற்றி நமக்குத் தெரியாத பல தகவல்களையும் முன்வைக்கிறது. நாடி ஜோதிடம் என்ற பெயரில் நடக்கும் பித்தலாட்டங்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறது. அதே நேரத்தில், கட்டுரையாளரால் நாடி ஜோதிடம் உண்மையா போலியா என்ற முடிவுக்கும் வர இயலவில்லை. ஒரு நாடி ஜோதிடரிடம் சென்றால் அவர் என்ன கேட்பார், அவரிடம் உள்ள ஓலைச்சுவடிகள் எப்படி இருக்கும், ஓலைச்சுவடியில் உள்ள செய்யுள்கள் எப்படி இருக்கும் என்று எல்லாவற்றுக்கும் கட்டுரையாளர் உதாரணம் தருகிறார்.
நாடி ஜோதிடர்களில் சிலர் ராம நாடகக் கீர்த்தனைச் சுவடி, மருத்துவச் சுவடிகள் போன்றவற்றை வைத்துக்கூட ஏமாற்றுவார்கள் என்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுவடிகள் எனப்படுபவற்றின் மொழி நடையை ஆராய்ந்து அவை மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்த சுவடிகளே என்று கூறுபவர், கார்பன் பரிசோதனையின் மூலம் அவற்றின் காலத்தைக் கண்டுபிடிக்கலாம் என்கிறார். நாடி ஜோதிடர்கள் கிட்டத்தட்ட ஒரு ரகசியக் குழுவைப் போல இயங்குபவர்கள் என்று இந்தக் கட்டுரை மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
‘அந்தக் கால சமையல் புத்தகங்கள்’ என்ற கட்டுரையும் மிக முக்கியமான ஒன்று. நம் சமையல் பாரம்பரியத்தின் சிறு துண்டை இந்தக் கட்டுரை எடுத்து முன்வைக்கிறது. ஆனால், அது சைவ சமையலாக மட்டுமே இருக்கிறது. அசைவத்தை விட்டுவிட்டுச் சமையல் வரலாற்றைப் பேச முடியுமா? ‘விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள்’ என்ற கட்டுரையும் சைவ, வைணவ இதழ்களைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஏனைய மதங்களின் இதழ்களைப் பற்றிப் பேசவில்லை.
தனது சார்புநிலையையும் ஆங்காங்கே திணித்துவிட்டுச் செல்கிறார் அரவிந்த். ஒரு கட்டுரையில், அந்தக் காலத்தில் பல சாதிகளைச் சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்களும் புலவர்களாகவும் அஷ்டாவதானிகளாகவும் திகழ்ந்தார்கள் என்றும் இப்போது அவர்கள் குறைந்ததற்குக் காரணம், திராவிட இயக்கங்கள்தான் என்றும் குற்றம்சாட்டுகிறார். அஷ்டாவதானம் போன்ற கலைகள் நசிந்துபோனதற்கு அச்சுத் தொழில்நுட்பத்தின் பெருக்கமும் நவீனத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும்தான் காரணம். மேலும், உலகெங்கும் அஷ்டாவதானிகள் இருந்திருக்கிறார்களே, அவர்கள் தற்போது குறைந்துபோனதற்குக் காரணம் திராவிட இயக்கங்கள்தானா?
அரவிந்த் சுவாமிநாதனுக்கு அந்தக் காலப் பக்கங்களில் தீராத வேட்கையும் தேடலும் இருக்கிறது. அந்தக் காலத்தின் தமிழ் மொழி நடையின் பல்வேறு துணுக்குகள் சில இடங்களில் காணக்கிடைக்கின்றன. அந்தக் கால விளம்பரங்கள், சுவடிகள், நூல்களிலிருந்து பாடல்கள், பத்திகள் என்று அவர் கொடுத்திருக்கும் பல அம்சங்கள் இந்த நூலைச் சிறந்ததொரு வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன.
நன்றி: தமிழ் இந்து, 8/1/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031315_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818