அதிர்வுகள்
அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள், விகடன் பிரசுரம், பக்.290, விலை ரூ.160.
சிறந்த ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவாளரான இலங்கை ஜெயராஜ் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பல கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன; சில கட்டுரைகள் சிரிக்க வைக்கின்றன; அதேவேளையில், சில கட்டுரைகள் நம்மை அழ வைக்கின்றன.
இதற்கிடையே, வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய தத்துவங்களும் சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. “பெரிய மாமி’‘ என்ற கட்டுரை தமிழ்ப் பெண் குலத்தின் மாண்பையும், பண்பாடு, கணவன் மீதான பாசத்தையும் பறைசாற்றுகிறது.
கணவனுடன் வாழ்ந்தபோது பட்டுப்புடவை, நகைகள், அலங்காரங்களுடன் வலம் வந்த மாமி, கணவன் இறந்ததும் “அவரோட வாழ்றதெல்லாம் வாழ்ந்திட்டன். இனி இதெல்லாம் யாருக்குத் தேவை?‘’ என்று எளிய வாழ்க்கை வாழ முற்பட்டது ஒரு சோக இலக்கியம் என்றாலும் பெண்ணின் பெருமை பேசக்கூடியது.
“முற்பகல் செய்யின்’‘ கட்டுரை மகன் மீதான தந்தையின் பாச வரலாறு; “அன்னையைப் போல் ஒரு..‘’ கட்டுரையில் தாய்மையின் பெருமையை தக்க உதாரணங்களுடன் எடுத்துரைத்திருக்கும் பாங்கு போற்றற்குரியது.
“செல் விருந்து காத்திருப்பார்!’‘ கட்டுரையைப் படித்த போது ஒரு திகில் படத்தைப் பார்த்த உணர்வு தோன்றியது. “பழசும் புதுசும்‘’ கட்டுரையில்.. பழைய ஏழை யாழ்ப்பாணத்துக்கும் புதிய பணக்கார யாழ்ப்பாணத்துக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை மிகுந்த ஆதங்கத்தோடும் ஏக்கத்துடனும் கட்டுரையாளர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மையுடன் விளங்குவது தனிச்சிறப்பு.
நன்றி: தினமணி, 28/8/2016.