தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள்

தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள், ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், (பாகம் 1) பக். 152, விலை 125ரூ, (பாகம் 2) பக். 152, விலை 125ரூ.

குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன் அந்த இதழில் பல்வேறு திருத்தலங்கள் குறித்து எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 2 பாகங்களாக வெளிவந்துள்ளன.

முதல் பாகத்தில் 18 கட்டுரைகளும், இரண்டாம் பாகத்தில் 23 கட்டுரைகளும் உள்ளன. பலருக்கும் தெரியாத அபூர்வ திருத்தலங்கள் குறித்தும், ஏற்கெனவே தெரிந்த கோயில்கள் குறித்த தெரியாத பல தகவல்களையும் தனக்கே உரிய பாணியில் தந்துள்ளார் ஏ.எம்.ஆர்.

கோயில்களின் ஸ்தல வரலாறு, சிறப்புகள், எதற்கான பரிகாரத் தலம், அமைவிடம், செல்லும் வழி ஆகியவற்றுடன் சில கோயில்கள் சரியாகப் பராமரிக்கப்படாத இன்றைய பரிதாப நிலையையும் நெகிழ வைக்கும் வகையில் எழுதியுள்ளார்.

சுக்கிர பரிகாரத்தலமான வெள்ளியங்குடி கோலவில்லிராமர் கோயில் அர்ச்சகரின் வறுமை பற்றி குறிப்பிட்டிருப்பது வருந்த வைக்கிறது. அன்னியப் படையெடுப்புகளால் சில ஆலயங்களுக்கு விளைந்த அராஜகங்களையும் பட்டவர்த்தனமாகக் குறிப்பிட்டுள்ளார்.

வந்தவாசி நெடுங்குன்றம் ராமர் கோயில் – தீர்க்காசலேஸ்வரர் ஆலயம், திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம் – பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயம், திருவள்ளூர் அருகே மேல்பொதட்டூர் ஸ்ரீதரணி வராஹஸ்வாமி ஆலயத்தில் சாளக்கிரம உமாமகேஸ்வரராக அருள்பாலிக்கும் ஸ்ரீதரணீஸ்வரர் என வைணவ – சைவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சத்ரபதி சிவாஜிக்கு வழித்துணையாய் வந்த ஓஜர் விக்னஹர விநாயகரின் ஆலயம், நாசிக் பஞ்சவடி ராமர் ஆலயம் ஆகியவற்றுடன் ஜெர்மனியின் ஹம் நகர் அருகே உண்ட்ராபில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயம் குறித்த கட்டுரைகள் கூடுதல் சிறப்பு.

அதேநேரத்தில் இரு பாகங்களிலும் பொருளடக்கம், கட்டுரைகளுக்கான பக்க எண் ஆகியவற்றைக் கொடுத்திருக்கலாம்.

நன்றி: தினமணி, 28/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *