நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ.

இந்நூலாசிரியர் அண்மையில் தான் படித்த எட்டு நாவல்கள், ஐந்து கவிதைத் தொகுதிகள், ஐந்து கட்டுரைத் தொகுதிகள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள் என மொத்தம் இருபது நூல்களைப் பற்றி இந்நூலில் சுருக்கமாக அறிமுகம் செய்திருக்கிறார்.

அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற முதல் வரிசை எழுத்தாளர்களிலிருந்து தனது முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் ராமலக்ஷ்மி வரை பலருடைய நூல்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஜாதிப் பிரச்னைகளின் பல்வேறு முகங்களைக் காட்டும் “சஞ்சாரம்’‘ (எஸ்.ராமகிருஷ்ணன்), வெளிநாட்டுப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஒரு தொழிலதிபர் அந்தச் செய்தியை தன் மனைவியிடம் கூறுவதற்கு தவிக்கும் தவிப்பை விவரிக்கும் இந்தியா 1948 (அசோகமித்திரன்),பாரதியார் தனது இறுதி நாள்களில் எப்படி இருந்தார் என்பதை ஆய்வின் அடிப்படையில் விவரிக்கும் “பாரதியாரின் இறுதிக்காலம்‘’ (ய.மணிகண்டன்),கூடா ஒழுக்கத்தை மையக் கருவாகக் கொண்ட “எங்கதெ’‘ (இமையம்), “எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது‘’ (தேவதச்சன்) கவிதை நூல் – இப்படி எதைப் படித்தாலும் மீண்டும் அந்த நூலைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்நூலிலுள்ள குறிப்புகள் ஏற்படுத்துகின்றன. அவ்வகையில் நூலாசிரியருக்கு வெற்றியே.

ஆயினும் சிறந்த படைப்புகளை அறிமுகப்படுத்தும் விதத்தில் மொழிநடையில் கூர்மையில்லை. சில இடங்களில் குழப்பமான வார்த்தைகள் (ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் திரும்பவும் படிக்கும்போது அப்புத்தகத்தின் நுண்ணுணர்வு நம்மிடம் வந்து சேரும், ஒரு மொழிபெயர்ப்பு என்பது எழுதப்படுகிற மொழியில் எல்லாரும் வாசித்துப் பழகும்படி எழுதப்பட வேண்டும், கவிதைகளையும் சிறுகதைகளையும் நிதான வாசிப்பில்தான் நாம் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்) – இப்படி இருப்பதால் சலிப்பு ஏற்படுகிறது. இவற்றோடு எழுத்துப் பிழைகளும் ஏராளம்.

நன்றி: தினமணி, 28/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *