அதிசயங்களின் ரகசியங்கள்,
அதிசயங்களின் ரகசியங்கள், நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி பதிப்பகம், விலை 160ரூ.
உலகில் இறைவன் படைத்த அதிசயங்கள் ஒருவகை, மனிதன் உருவாக்கிய அதிசயங்கள் இன்னொரு வகை. உலக அதிசயங்கள் குறித்தும், அதில் புதைந்து கிடக்கின்ற ரகசியங்கள் பற்றியும் அதில் புதைந்துகிடைக்கின்ற ரகசியங்கள் பற்றியும் எழுத்தாளரும், பொறியாளருமான நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி முத்துச்சரம் பகுதியில், ‘அதிசயங்களின் ரகசியங்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார்.
பல சுவாரஸ்யமான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய இந்தக் கட்டுரைத் தொடர் வாசகர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றது. தொடராக வந்ததைக் காட்டிலும் இன்னும் பல புதிய செய்திகளையும், ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை மேலும் விரிவாக்கியும் வண்ணப்டங்களுடன் தினத்தந்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.
தொடக்கத்தில் கிசாவில் உள்ள பிரமிடுகள், பாபிலோனிய பெருஞ்சுவர் மற்றும் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் சோயுஸ் சிலை, ஆர்டமிஸ் ஆலயம், பொலோசஸ், அலெக்சாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம், மவுசோலியம் ஆகிய 7 இடங்களே உலக அதிசயங்களாகக் கருதப்பட்டன.
அதிசயங்கள் மாறிக்கொண்டு போவது ஒன்றும் அதிசயமல்ல. அந்த வகையில் உலக அதிசயங்கள் மாறின, உலக அதிசயம் பற்றிய பட்டியலை வெளியிட 2006ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சிக்கன் இட்சா பிரமிடுகள்(மெக்சிகோ), மீட்பர் கிறிஸ்து சிலை (பிரேசில்), தாஜ்மகால் (இந்தியா), கொலோசியம்(ரோம்), சீனப்பெருஞ்சுவர் (சீனா), மச்சு பிச்சு (பெரு), பெட்ரா (ஜோர்டான்) ஆகியன அறிவிக்கப்பட்டன. இத்தகைய உலக அதிசயங்கள் குறித்து விரிவாகவும், ஆய்வியல் அடிப்படையிலும் ஆசிரியர் இந்த நூலில் அழகுற விளக்கியுள்ளார்.
மேலும் இவை தவிர இன்னும் சில அதிசயங்கள், இந்தியாவின் சில அதிசயங்கள், தமிழகத்தின் அதிசயங்கள், உலகின் தொழில்திறன் அதிசயங்கள், உலகின் இயற்கை அதிசயங்கள், அதிசயங்களை விஞ்சிய பேரதிசயங்கள் என்னும் தலைப்புகளில் அதிசயங்கள் குறித்து நாம் அறியாத பல செய்திகளை எழுதியுள்ளார்.
வரலாற்று ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரையும் இந்நூல் நிச்சயம் கவரும்.
நன்றி: தினத்தந்தி, 24/8/2016.