ஒளரங்கசீப்
ஒளரங்கசீப், ஆங்கிலத்தில்: ஆட்ரே ட்ரஷ்கெ, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.158, விலை ரூ.200.
முகலாயப் பேரரசர்களில் மிகக் கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். உண்மையில் ஒளரங்கசீப் கொடூரமானவரா என்பதை இந்நூல் ஆராய்கிறது. அமெரிக்க வரலாற்றாசிரியரான ஆட்ரே ட்ரஷ்கே, இது குறித்து பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஒளரங்கசீப் பற்றி கூறப்படும் பல குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வருகிறார்.
ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன என்று கூறுவது உண்மையல்ல என்று கூறும் நூலாசிரியர், அவருடைய ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை பத்து பன்னிரண்டுக்கு கொஞ்சம் அதிகம் இருக்கும். அவற்றிலும் சக்ரவர்த்தியின் நேரடி ஆணையின் கீழ் இடிக்கப்பட்டவை வெகு சில மட்டுமே என்ற வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஈடனின் கருத்தை எடுத்துக் கூறுகிறார்.
‘ஒளரங்கசீப் தனது ஆட்சிக் காலம் முழுவதும் இந்து மதக் கோயில்கள் மற்றும் அதன் தலைவர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதையே பொதுவான இயல்புநிலைக் கொள்கையாக வைத்திருந்தார். தேவையற்ற தலையீடுகளிலிருந்து கோயில்களைப் பாதுகாப்பதையும், இந்து சமூகங்களுக்கு நிலங்களை அளிப்பதையும், இந்து ஆன்மிகத் தலைவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதையும் அதிகாரிகள் செயல்படுத்த ஏராளமான அரசாணைகளை வெளியிட்டார்’ என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.
இசைக்குத் தடைவிதித்த ஒளரங்கசீப், அவருடைய இளமைக் காலத்தில் இசையில் ஆர்வமுடையவராக இருந்திருக்கிறார். அவருக்குப் பிடித்தமான பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் இருந்திருக்கின்றனர்.
ஒளரங்கசீப் ஆட்சியின் பல்வேறு தருணங்களில் மது, போதைப்பொருள்கள், விபசாரம், சூதாட்டம், வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் எழுத்துகள், மதவிழாக்களையும் பண்டிகைகளையும் பொதுவெளியில் கொண்டாடுதல் ஆகியவற்றுக்குத் தடைவிதிக்கவும், கட்டுப்படுத்தவும் ஒளரங்கசீப் முனைந்தார்.
என்றாலும் ஒளரங்கசீப் வரலாற்றை எளிதாக விளக்க முடியாது. எதிர்மறையான கருத்துகள் மற்றும் குழப்பமான அம்சங்களைக் கொண்ட மனிதராகவே அவர் விளங்குகிறார் என்ற முடிவுக்கு வருகிறார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 7/3/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/9789390958252/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818