அழகிய நதி

அழகிய நதி, தரம்பால், தமிழில்: பி.ஆர்.மகாதேவன், கிழக்குப் பதிப்பகம், மொத்த விலை: ரூ.400.

ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக இருந்தது என்பதை ‘அழகிய மரம்’ புத்தகமும், இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் என்னவாக இருந்தது என்பதை ‘அழகிய நதி’ புத்தகமும் விரிவாக விவரிக்கின்றன.

அழகிய நதி

பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஐரோப்பியர்கள், குறிப்பாக பிரிட்டிஷார் வியந்து பொறாமைப்படும் அளவுக்கு இருந்ததை ‘அழகிய நதி’ விளக்குகிறது. வானவியல், பீஜ கணிதம், உலோகவியல், நோய்த்தடுப்பு சிகிச்சை முறைகள், அம்மை நோய்க்குச் சிகிச்சை முறை, காகிதத் தயாரிப்பு, இரும்பு, பித்தளை, செம்பு பயன்பாட்டில் உச்சம், உலகத் தரமான எஃகு தயாரிப்பு, விவசாயத்தில் அதிக உற்பத்தித்திறன், கோயில்கள் மற்றும் அணைகள் கட்டுமானத்தில் நிபுணத்துவம், நீர் மேலாண்மை என்று பல விஷயங்களை நுட்பமாக விவரிக்கிறார்.

பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம், வானவியல் பற்றிய குறிப்புகள், சனி கிரகத்தின் ஆறாவது துணைக்கோளை இந்திய வானவியலாளர்கள் அறிந்திருப்பது, இருபடித் தேற்றம் (பைனாமியல் தியரம்), இந்து அல்ஜீப்ரா, மதராஸ் மாகாணத்தில் கட்டிடத்துக்கு உறுதியையும் வனப்பையும் சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட சுண்ணச்சாந்து, இந்தியர்கள் சுயமாகக் காகிதம் தயாரித்த முறை, சணலைப் பயன்படுத்திய விதம், இலை – தழைகளை உரமாகப் பயன்படுத்தி விவசாயத்தில் கண்ட அமோக விளைச்சல், உலகின் எந்தப் பகுதியிலும் உருவாக்கியிராத விதைக் கலப்பைகள், ராமநாயக்கன் பேட்டையில் வெள்ளையர் வருவதற்கு முன்னரே இருந்த இரும்புப் பட்டறைகள், மத்திய இந்தியாவில் இரும்பு உற்பத்திசெய்த முறைகள், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேனிரும்பு, மேற்கு இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், கிழக்கு இந்தியாவில் வெந்நீரைக் கொண்டு பனிக்கட்டிகளைத் தயாரித்த விந்தை என்று நம்மைக் கண்டு வியந்துள்ளனர் ஐரோப்பியர்கள். கிரேக்கம், லத்தீன், ரோமானிய மக்களோடு ஏற்பட்ட தொடர்பால் நவீன அறிவியல், தொழில்நுட்பங்கள், வானவியல், கணிதம் ஆகியவற்றைக் கற்றிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, பிறகு மூல நூல்களைப் படித்துப் பார்த்தது இந்தியர்கள் இவற்றில் தனித் திறமையுடன் இருந்ததை உறுதிசெய்துள்ளனர். இந்த இரு புத்தகங்களும் நம்முடைய இரு நூற்றாண்டு வரலாற்றை வேறொரு கண் கொண்டு பார்க்க உதவுகின்றன.

நன்றி: தமிழ் இந்து, 22.02.2020.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9789386737878_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *