பர்மாவும் தமிழர்களும்

பர்மாவும் தமிழர்களும், மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், பக்.200, விலை ரூ.180

பர்மாவுடன் தமிழர்களுக்கு நெடிய உறவு இருந்ததுடன், முன்னொரு காலத்தில் அங்கு தமிழர்கள் உயர்நிலையில் வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள். பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்றிருந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை பின்னாளில் தாழ்ந்ததையும் விவரிக்கும் இந்நூல், இன்னொருபுறத்தில் பர்மாவின் வரலாற்றைக் கூறும் நூலாகவும் உள்ளது.

1826 இல் பர்மாவில் தமிழர்கள் குடியேறியதாகச் சொல்லப்பட்ட போதிலும், 1852 ஆம் ஆண்டு கீழை பர்மாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகுதான் அதிக அளவில் தமிழர்கள் பர்மாவில் குடியேறினர். அதற்கு முன்பு வாணிகம் செய்யச் சென்ற தமிழர்கள் இரங்கூனில் வசித்தனர்.

1930 ஆம் ஆண்டளவில் இரங்கூனில் 82.8 சதவீதமான வங்கிகளும், வட்டித் தொழில்களும் இந்தியர்கள் (நகரத்தார்) வசமிருந்தன. 1869 இல் பர்மாவில் போடப்பட்ட ரயில் பாதைகளுக்காக உழைத்தவர்கள் தமிழர்கள். இரங்கூனில் ‘ஜோதி’ என்ற மாத இதழை நடத்தி வந்தவர் தமிழறிஞர் வெ.சாமிநாத சர்மா.

1948 இல் பர்மாவில் உருவாக்கப்பட்ட அயல்நாட்டார் சட்டத்தால், 10 ஆயிரம் இந்தியர்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் வேலை செய்த தமிழர்கள் பதவிகளை இழந்தார்கள்.

தற்போது பர்மாவில் உள்ள இளம் தலைமுறை தமிழைப் படிக்கவில்லை. பர்மியத் தமிழர்களுக்கு தமிழ் படிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் "இளந்தமிழர் இயக்கம்’

போன்ற அமைப்புகள் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.<br />
இவ்வாறு பர்மாவுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பை விரிவாக இந்நூல் விளக்குகிறது. சிறந்த ஆவணம்.

நன்றி: தினமணி, 27/11/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *