பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், பாரதியின் துணைவியார் செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், பக். 136, விலை 100ரூ.

‘‘அந்த நாளில் ‘கல்யாணராமன் ஸெட்’ என்ற கம்பெனி நடத்திய, ‘துரோபதி துகிலுரிதல்’ என்ற நாடகம் பாரதியின் மனதைக் கவர்ந்தது. பின்னாளில் உலகத்தார் வியக்கும் வண்ணம், அவர் இயற்றிய பாஞ்சாலி சபதத்திற்கு, சிறுவயதில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியே காரணமாயிருந்து இருக்கிறது,’’ (பக்.23).

‘ராமாவதாரத்தில் கூனிப் போகும்படி செய்து, கூனியின் கூனலைக் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் நிமிர்த்தினான். தன் கவிதா சக்தியால், மின்சார சக்தி கொண்ட பாக்களால், தமிழகத்தின் கூனலைப் பாரதி நிமிர்த்தினார் (பக்.89)‘.

‘‘பாரதியார் தத்துவத்தின் மெய்ப்பொருள்! பாரத நாட்டின் ஜோதி! ரிக் வேதம் படிக்கப் படிக்க, அவரது மூளையில் உண்மையாகவே தாம் அக்னி தேவன் – ருத்ர குமாரன் – வாயு –முருகன் என்றெல்லாம் தோன்றலாயிற்று. அவரது பாடல்களிலும் ஆவேசமும் தெய்வக் கனலும் ஏற ஆரம்பித்தன,’’ (பக்.100).

இவ்வாறெல்லாம், மகாகவியைப் பற்றி அவரது துணைவியார் சொல்லும் ஏராளமான சம்பவங்கள் நிறைந்த இந்நூல், எந்தக் காலக்கட்டத்தில் முதன் முதலாக வெளியிடப்பட்டது என்ற வரலாற்றுச் செய்தியை, எங்காவது ஓரிடத்திலாவது பதிப்பகத்தார் பதிவு செய்திருந்தால், அது பாரதியின் சரித்திரம் படைத்த அவரது தர்மபத்தினிக்குச் செய்த மரியாதையாக அமைந்திருக்கும். அடுத்த பதிப்பிலாவது அது இடம் பெறட்டும்.

-பின்னலூரான்

நன்றி: தினமலர், 13/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *