தேவதையின் பிள்ளைகள்

தேவதையின் பிள்ளைகள், அல்லிநகரம் தாமோதரன், மேன்மை வெளியீடு, விலை 120ரூ.

உணர்ச்சிவசத்தால் மட்டும் கதைகள் தோன்றிவிடாது. சிறு சிறு உணர்வுகளைக் கோர்த்து அதற்கிடையில் ஒருமுறை வாழ்ந்து பார்த்த பிறகு தான் முழுக் கதையும் மனதுக்குள் வந்து தவழும். அதுவரை அந்தக் கதையின் கண்ணி அகப்படாமலே இருக்கும்.

தேவதையின் பிள்ளைகள் என்கிற இந்த சிறுகதைத் தொகுப்பும் உணர்வுகளை உரசியே எழுதப்பட்டிருக்கிறது.

எளிய மக்களின் துயரங்களை வைத்தே மனிதர்களின் உயர்ந்த பண்புகளையும், அவர்களது உள்ளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதனால்தான் தொகுப்பு முழுக்க பணக்காரர்களைப் பார்க்க முடியவில்லை. ஆசிரியரின் சொந்த அனுபவங்கள் தான் இங்கே சிறுகதைகளாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

கதைகள் முழுக்க வலம் வரும் எளிய மனிதர்களின் துயரம், வாசகர்களின் துயரமாக மாறும்போது, இன்னும் நெருக்கமாக கதையுடன் தொகுப்பின் தலைப்பில் வரும் கதையில், கோழிக் குஞ்சுகளிடம் பாடம் படிக்கும் இளைஞன், ‘தேரில்லா பாரிகள்’ கதையில் வரும் லட்சுமணன், ‘கலைக்கக் கூடாத கனவுகள்’ கதையில் வரும் இளைஞன், கிழவரின் பேச்சு என ஒவ்வொரு கதையும் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

எட்டாவதாக வரும், ‘மன்னிப்பு’ கதையில் மயானக் கரையிலும் வெட்டியானிடமும் கதை பயணிக்கிறது. இதுபோன்ற கதைகளை நேரடி அனுபவங்களில் இருந்து எழுதினால் மட்டுமே வாசகரைத் தொட முடியும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.

தொடர்ச்சியாகப் படிக்கும்போது சில கதைகளின் பேச்சு நடை, புதுவிதமான அனுபவத்தையும், சிறு குழப்பத்தையும் தருவதுபோல இருக்கின்றன. இருந்தாலும் கதைகள் தரும் அனுபவம் ஒவ்வொன்றும் புதுமை.
மனிதர்கள் அன்பு, பாசம், கருணை என போலித்தனம் இல்லாதவர்களாக ஏதாவது ஒன்றில் வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டிருப்பர். அவர்களை எளிதாகச் சந்திக்க, ‘தேவதையின் பிள்ளைகள்’ தொகுப்பு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

–மனோ

நன்றி: தினமலர், 22/10/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *