ஏவுகணை தந்தை அப்துல் கலாம்

ஏவுகணை தந்தை அப்துல் கலாம், சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ.

தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, புகழோடு தோன்றி, எல்லார் உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

இவருடைய பிறப்பு முதல், மறைவு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளையும் எளிய நடையில் விளக்கியுள்ளார், ஆசிரியர் சிவரஞ்சன். பிறந்த இடம் புகழ் வாய்ந்த ராமேஸ்வரம். எளிய குடும்பத்தில் பிறந்த கலாம், பள்ளிப் பருவத்தில், ராமேஸ்வரம் கடற்கரைக்குச் சென்று, பறவைகள் பறக்கும் முறையை அறிந்து கொண்ட நிகழ்வு, பிற்காலத்தில் பறக்கும் போர் விமானங்களையும், ஏவுகணைகளையும் வடிவமைக்கும் முறைகளை அறிந்து கொள்ள துணை செய்தது.

விளக்கம் தந்த தன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யரை நன்றியுடன் நினைவுகூர்வது அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலில் போர் விமானங்களை வடிவமைத்தல், ராக்கெட்டுகளை செலுத்துதல், செயற்கைக்கோள் மூலம் நட்சத்திரங்களின் செயல்பாட்டை அறிதல் போன்ற அரிய செய்திகள் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. 1991ம் ஆண்டு அவர் டி.ஆர்.டி.எல்.,லில் இருந்து ஓய்வு பெற்றார்.

அப்போது அவரின் வயது, 60. கலாம், ‘நான் இது நாள் வரை அரசு ஊழியனாக அரசுக்குக் கட்டுப்பட்டு உழைத்தேன். இனி நான் நாட்டுக்காக சகல துறைகளிலும் நாடு முன்னேறப் பாடுபடுவேன்’ என்றார் (பக்.110).

ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும்போது, சம்பிரதாயத்தை மீறி தன் பதவி ஏற்பு விழாவின்போது, பள்ளிப் பிள்ளைகள், 100 பேர் பங்கேற்க வேண்டும் என்று கூறிய அவர், உள்ளம் இளைய தலைமுறையின் மீதும், இந்திய நாட்டின் மீதும் உள்ள பற்றை எடுத்துக் காட்டுகிறது.

கரும்பு இனிப்பாக இருக்கும். ஆம்? அவர் பேக்கரும்பில் புதைக்கப்படவில்லை; எல்லா உள்ளங்களிலும் விதைக்கப்பட்டிருக்கிறார்.

கலாம் வாழ்வும், எண்ணமும் எல்லா உள்ளங்களையும் செம்மைப்படுத்தி, இந்த நாட்டை எல்லா வகையிலும் முன்னேற துணை செய்யும் என்பதில் ஐயம் இல்லை. எல்லாரும் படித்துப் பயன் பெறுவதோடு, இளைஞர்கள் படிக்க வேண்டிய பனுவல்.

– பேரா. முனைவர் இரா.நாராயணன்

நன்றி: தினமலர், 14/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *