எழுத்தும் நடையும்
எழுத்தும் நடையும், சி.மணி, தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.240, விலைரூ.200.
சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்ற சிறுபத்திரிகை மூலம் அறிமுகமான பல கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.மணி. அவர் எழுதிய சில கவிதைகள், ஒரு சிறுகதை, ஒரு நெடுங்கதை, ஒரு நாடகம், சில கட்டுரைகள், அவரது நேர்காணல் மற்றும் இதுவரை நூலாக்கம் பெறாத சில கவிதைகள் ஆகியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
இவரது புகழ்பெற்ற கவிதையான "நரகம்' கவிதை புதுக்கவிதை உலகில் ஒரு மைல்கல் என்று அப்போது புகழப்பட்டது. அது இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
தாண்டவநாயகம் – நெடுங்கதை புதுமைப்பித்தன் பாணியில் எள்ளலும் ஆழமும் மிக்கது. மூன்று நண்பர்கள் உரையாடும்விதமாக எழுதப்பட்ட "அலசல்' நாடகம் எளிமையாகவும் ஆழமாகவும் அமைந்து ஒரு சிறந்த திரைக்கதையின் நுணுக்கத்துடன் இருக்கிறது. திரைப்பாடல்கள் குறித்த கட்டுரையும் நேர்காணலும் புதிய தகவல்களைத் தருகின்றன.<br />
எல்லாவற்றையும் விட "இலக்கியத்தில் கண் வர்ணனை என்ற ஆராய்ச்சிக் கட்டுரை மிக சிறப்பானது. சங்க இலக்கியம், பெருங்கதை, நளவெண்பா, திருப்புகழ், வில்லிபாரதம், கலிங்கத்துப் பரணி போன்ற இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கண் வர்ணனைகளை விளக்கி இறுதியில் வல்லிக்கண்ணனின் "உன் கண்கள்' கவிதையோடு ஒப்பிட்டு இருக்கும் திறன் வியக்க வைக்கிறது.<br />
மரபு கவிதையிலும் புதுக்கவிதையிலும் மட்டுமல்லாது, பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆழங்காற்பட்டவர் கவிஞர் சி.மணி என்பதை அழுத்தமாக நிறுவுகிறது இத் தொகுப்பு.
நன்றி: தினமணி, 24/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818