எல்லாமே இலவசம் இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி
எல்லாமே இலவசம், இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி, பாரதி சின்னசாமி,எழில்மதி பதிப்பகம், பக்.188, விலைரூ.120.
சந்தைப் பொருளாதாரம் தற்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உலகச் சந்தையை தேசியச் சந்தைகளாக பிளவுபடுத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் தனக்கிருந்த சந்தையை இழந்து சரிந்து விழத் தொடங்கியுள்ளன.
சந்தையின் கட்டுடைவு சந்தையில்லாப் பொருளாதாரத்தை அதாவது இலவசப் பொருளாதாரத்தைத் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும் என்ற அடிப்படையில் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றாக நூலாசிரியர் இலவசப் பொருளாதாரத்தை முன்மொழிகிறார்.
ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கீரை, காய்கறிகள் விளைவித்து அந்த ஊரின் மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஊர் பொது இடத்தில் சமையல் செய்து வீட்டில் தனித்தனியாகச் சமையல் செய்யும் முறையை ஒழிக்க முடியும். ஊருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை ஊர் பொதுநிலமாக அரசு அறிவிக்க வேண்டும். அந்த பொதுநிலத்தில் ஊர் மக்கள் எல்லாரும் பாடுபட்டு பொருள்களை உற்பத்தி செய்து தங்களுடைய தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள இந்த இலவசப் பொருளாதாரம் உதவும்.
இந்தப் பொருளாதார முறையினால், பெண் அடிமைத்தனம் ஒழியும். சாதி வேற்றுமைகள் தகரும். வீணான செலவுகள் குறையும் என இலவசப் பொருளாதார முறையின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறார் நூலாசிரியர்.
இந்த இலவசப் பொருளாதார முறைக்கு உதாரணமாக கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் இலவச முருங்கை கிராமத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். எனினும், இரண்டு உலகப் போர்களின் மூலம் சந்தையை விரிவாக்கிக்கொண்ட தனியுடமை சார்ந்த சந்தைப் பொருளாதாரம், இந்த இலவசப் பொருளாதாரத்துக்கு வழிவிட்டு கைகட்டி, அமைதியாக ஒதுங்கி நிற்குமா? என்ற கேள்வி நூலைப் படிக்கும்போது எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நன்றி: தினமணி, 8/10/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027239.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818