மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ.

அதிகாரம் ஈரோட்டில் இருக்கிறது!

தேசப்பிதா மகாத்மா காந்தி, மோகன் தாஸ் ஆகப் பிறந்து 150ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. பாபுஜியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சிறிதளவேனும் அவரைப் பின்பற்ற முயல்கிறவர்களின் எண்ணிக்கை தான் நாளும் அருகிக்கொண்டே வருகிறது.

முனைவர் இளசை சுந்தரம், பாபுஜியின் வாழ்க்கையிலிருந்து 200 அரிய நிகழ்வுகளைத் தொகுத்துப் பலாப்பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துத் தந்திருக்கிறார். ஒரு சமயம் பாபுஜியின் பவுண்டன் பேனா காணாமல் போய்விட்டது. அதன்பிறகு விலை உயர்ந்த பொருளைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டு கட்டைப் பேனாவை பழக்கத்தில் கொண்டாராம் பாபுஜி. அப்படியும் அதன் அலகு (முள்) மடங்கிப் போய் விட்டிருக்கிறது. அடுத்த அலகு கிடைக்கும் வரை நேரத்தை வீணாக்க விரும்பாமல் இறகு பேனாவைச் சீவிப் பயன்படுத்தினாராம். அப்படி இறகு பேனாவால் பாபுஜி எழுதிய முதல் கடிதம் மௌன்ட்பேட்டன் பிரபுவுக்கு.

1933 ஆம் வருடம் எரவாடா சிறைச்சாலையில் இருந்தபோது பாபுஜி உண்ணாநோன்பு தொடங்கினார். அதற்கு முன்னால் மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் ராஜாஜியும் சங்கர்லால் பாங்கரும் வற்புறுத்தியிருக்கிறார்கள். முதலில் அதற்கு இசைவளிக்காத பாபுஜி, நண்பர்கள் மனம் புண்பட்டுவிடக்கூடாது என்பதால் மனம்மாறி சோதனை செய்துகொள்ள நிபந்தனையோடு இசைந்திருக்கிறார்.

அப்போது அவர் எழுதியது, “டாக்டர் பரிசோதனை முடிவைப் பிரசுரிக்கக்கூடாது. இதைச் சிலர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறேன். டாக்டரிம் பரிசோதனை செய்துகொள்வதால் நான் உண்ணாநோன்பு மேற்கொள்வது நிற்காது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்’‘.

தம்முடைய 73ஆம் வயதில் ஆகாகான் அரண்மனையில் பாபுஜியோடு சிறையில் இருந்தார் அன்னை கஸ்தூர்பா. அப்போது ஓய்வு கிடைக்கும்போது தம்முடைய மனைவிக்கு கீதையிலும், இராமாயணத்திலும் எளிய விளக்கங்களுடன் வகுப்பு எடுத்திருக்கிறார் காந்திஜி.

தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரு முடிதிருத்துபவர், ஒரு கடைக்காரர் மற்றும் ஒரு குமாஸ்தாவுக்கு அவர்கள் விரும்பியவாறு ஆங்கிலம் கற்பித்திருக்கிறார். அவர்களிடம் ஆசிரியருக்குக் கொடுப்பதற்கான பணமோ, வகுப்புக்குச் செல்வதற்கான நேரமோ இருக்கவில்லை. அதனால் பாபுஜியே அவர்கள் இருக்கும் இடத்துக்குப் போய் பாடம் சொல்லித் தந்தாராம்.

1920களில் ஒத்துழையாமை இயக்கம் நடந்த காலத்தில் ஈரோட்டில் பெரியார் தீண்டாமை ஒழிப்பு, கள்ளுக்கடை ஒழிப்பு, கதர் அணிவது போன்ற அம்சங்களில் காந்திஜியோடு உடன்பாடு கொண்டிருந்திருக்கிறார். தாமும் தம்முடைய குடும்பத்தாரும் கதர் அணிந்ததோடு கள் விற்பனையைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தம்முடைய தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவர் பெரியார்.

ஈரோட்டில் கள்ளுக் கடை மறியலில் ஈடுபட்ட பெரியார் கைதானதும், அவருடைய மனைவி நாகம்மையாரும் சகோதரி கண்ணம்மையாரும் மறியலைத் தொடர்ந்தார்கள். அப்போது “மறியலை நிறத்திவிட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே” என்று பம்பாயிலிருந்து மதன்மோகன் மாளவியா யோசனை சொன்னபோது காந்திஜி பதிலளித்தார்: ”மறியலை நிறுத்த எனக்கு அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் ஈரோட்டில் உள்ளது.” இப்படிப் பயனுள்ள பல செய்திகளை அறிந்து கொள்ள உதவுகிற நல்ல தொகுப்பு இது.

நன்றி: கல்கி, 14/10/2018.

 

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027224.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *