அச்சப்படத் தேவையில்லை

அச்சப்படத் தேவையில்லை, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ.

அப்பாவை புதுப்பிப்பது?

இலங்கையில் பிறந்த ஆனந்தகுமாரசாமி, அந்தையை இழந்த நிலையில் இரண்டு வயதுக் குழந்தையாக அவருடைய தாயாரால் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கல்வி பெற்றார். ஆனாலும், இந்தியக் கலை, பண்பாடுகளின் தாக்கம் அவரிடம் நிரம்பவே குடிகொண்டது. தம்முடைய குழந்தைகளுக்கு ராமா, நாரதா, ரோகிணி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ஆனந்தகுமாரசாமி. தம்முடைய வாழ்நாள் முழுவதும், உலகெங்கும் பயணம் செய்து அவர் சேர்த்து வைத்த அரிய கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் தற்போது பாஸ்டன் நகரில் மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற தகவலை அழகாகச் சொல்கிறது ஒரு கட்டுரை.

மாயவரத்துக்காரரான ஓவியர் சீனிவாசன் நடராஜன் தம்முடைய இந்த நூலில் அந்தப் புனித நகரத்தின் கலை, இலக்கியப் பெருமைகளை உருகி உருகி அனுபவத்து எழுதுகிறார். உஜ்ஜயினி பயணம் மேற்கொண்டபோது செம்மையாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிற அதன் வரலாற்று இலக்கிய வளங்களோடு இன்றைய மாயவரத்தையும் ஒப்புநோக்கி எழுதுவது அழகு.

மும்பை சத்ரபதி விமான நிலையத்தின் நேர்த்தியான வடிவமைப்பைச் சொல்லி தினந்தோறும் கண்ணாடி உடைந்து விழுகிற சென்னை விமான நிலையத்தின் அவலத்தையும் சுட்டிக்காட்டுவது சிந்தனையைத் தூண்டுகிறது. ‘விமான நிலையத்தின் அத்தனை பெரிய பரப்பு வெளியில் வைக்கப்பட்டிருந்த ஒற்றைப் பதாகையில் சிரித்துக்கொண்டிருந்த தலைவரைப் பார்த்துத்தான் கண்ணாடிகள் உடைந்த விழுகின்றனவோ’ என்று எழுதுகிறார்.

மாயவரமும் கும்பகோணமும் காவிரியைப் பயன்படுத்துவது சாக்கடை நீரைக் கொண்டு போய்க் கடலில் கலப்பதற்காக மட்டுமேயன்றி, ‘நீரைப் புனிதமாகக் கருதவேண்டிய அவசியம் இல்லாததால் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு இல்லை’ என்று அங்கலாய்க்கத்தான் முடிகிறது இந்த ஆசிரியரால்.

வெங்கட் சாமிநாதனின் நெருங்கிய நட்பை அனுபவத்த ஆசிரியர் அவரை ஒரு சிறு கட்டுரையில் சித்திர நேர்த்தியோடு படம்பிடிப்பது ரசனைக்குரியது. அவரும் தி.க.சி.யும் சந்திப்பதைப் பற்றி இப்படி எழுதுகிறார். ‘இரண்டு குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் எப்படிக் குதூகலம் பிறக்கும் என்பதை நான் தி.க.சி.யின் வீட்டில் பார்த்தேன்…’ ஆனந்த குமாரசாமிக்குப் பிறகு தன்னுடைய கலை தரிசனம் வெ.சா.மட்டுமே என்று பிரகடனம் செய்கிறார் சீனிவாசன்.

சர்வதேச அளவிலும் கவனம் பெற்ற ஓவியர் என்பதால் அந்தக் கலையைப் பற்றிய நுட்பங்களை பல கட்டுரைகளில் இயல்பாகச் சொல்லிப் போவதை நன்கு ரசிக்கலாம். ‘எதார்த்தத்தின் தனிமை நிர்வாணம்’ கட்டுரையில் இதை நன்றாக உணர்ந்து அனுபவிக்க முடிகிறது. ஓவியங்களைப் போலவே கவிதைகளையும் ரசிக்கிற ஆசிரியர் எழுதிய சில நூல் மதிப்புரைகளும் உயர்தரமானவை. பல இதழ்கள், மின்னியல் பதிவுகள் என்று இடம்பெற்ற கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.

தன்னுடைய தகப்பனாரைப் பற்றிய நினைவுகளை அழகாகப் பதிவுசெய்கிற கட்டுரையையும் குறிப்பிட வேண்டும். அந்தக் கட்டுரையின் கடைசி வரி மனசைத் தொடுகிறது. ‘என் பையனுக்கு அப்பாவிடம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை, கலையும் வாழ்வும் தவிர. தாத்தாவிடம்தான் இருக்கிறது. என்னால் என் அப்பாவை எப்பொழுதும் புதுப்பிக்க முடியவில்லை’. உயர்வான ரசனைக்கு உகந்த நூல்.

நன்றி: கல்கி, 7/10/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *