என் நினைவில் சே
என் நினைவில் சே, சே குவேராவுடன் என் வாழ்க்கை, அலெய்டா மார்ச், தமிழில் அ.மங்கை, அடையாளம், புத்தாநத்தம், விலை 250ரூ.
போராளியின் மற்றொரு பரிமாணம்
அலெய்டா மார்ச், சே குவேராவின் இரண்டாவது மனைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். கியூபா புரட்சிப் போரில் தலைமறைவு இயக்கத்திலும், கொரில்லா குழுவிலும் பணியாற்றியவர். கியூபாவின் பெண்கள் அமைப்பிலும், கல்வித்துறை, அயலகத்துறை ஆகியவற்றிலும் பணியாற்றியவர். தன் நினைவில் படிந்து நிற்கும் சேவை இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார்.
கண்டிப்பான தலைவராக, கறாரான போராளியாக உலகம் அறிந்த சேவின் மற்றொரு பரிமாணத்தை நம்முன் திறந்து காட்டுகிறது அவரது நினைவுகள். குறுகிய கால குடும்ப வாழ்க்கையே என்றபோதிலும், சேவுடனான அன்பும் நெருக்கமும் மிக்க அன்றாட வாழ்க்கைப் போக்கைப் பதிவுசெய்துள்ளார். உடை அணிவதில் அக்கறையின்மை, தொலைக்காட்சியில் குத்துச் சண்டை பார்க்கும்போது காற்றில் குத்துவிடும் ரசிகன், குளியலுக்கு நீரைப் பதமான சூட்டில் எதிர்பார்ப்பவர், குழந்தைக்கு அடிபட்டவுடன் பதறும் அப்பா, அம்மாவின் இறப்புக்கு இடிந்துபோகும் மகன், மனைவியின் முழங்கால் குழியை முத்தமிடும் காதல் கணவன், குழந்தைகளுக்கான கதைகளையும், மனைவிக்கான கவிதையையும் தன் குரலில் வாசிக்கும் மனிதன் என சேவின் இன்னொரு முகம் நம் கண்முன் விரிகிறது.
சேவுடனான வாழ்வின் முக்கிய தருணங்களின் புகைப்படங்கள் தொகுப்பும் அடங்கியுள்ளது. ஆங்கிலம் வழி தமிழில் அ.மங்கை மொழிபெயர்த்துள்ளார்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தி இந்து, 7/4/2018.