என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும், ஆங்கில மூலம் ச.இராஜரத்தினம், தமிழில் ப.காளிமுத்து, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பக்.560, விலை ரூ.600.
விருதுநகரில் சாதாரண பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நூலாசிரியர், தனது கடின உழைப்பால் இந்திய வருவாய்த்துறையில் ஆணையராகப் பணிபுரிந்தவர். பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்தவர். எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் நேர்மையாகப் பணிபுரிந்தவர். பல பணியிட மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்.
வரி ஏய்ப்புச் செய்பவர்களின் பல தந்திரங்களைத் தெரிந்து கொண்டு, அவர்களை வரி செலுத்தச் செய்ய நூலாசிரியர் செய்த பல முயற்சிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், செல்வாக்கு மிக்கவர்களின் தலையீடுகளைச் சமாளித்த நூலாசிரியரின் அனுபவங்கள், செய்யும் வேலையில் நேர்மையாக இருக்க நினைப்பவர்களுக்கு வழிகாட்டுபவை. காமராசர், என்.டி.ராமாராவ் போன்ற பெரிய தலைவர்களுடன் நூலாசிரியர் பழகிய அனுபவங்கள் எல்லாம் இந்நூலில் பதிவாகியுள்ளன.
‘ஒருவர், வாழ்க்கைக்குத் தேவையான குறிக்கோள்களை மனத்துள் கொண்டு, கடின உழைப்பிலே தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரேயானால், அவரால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. ஆனால் அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும். புகையிலை, மது ஆகியவற்றை விலக்கி, உணவில் கவனம் செலுத்தி, உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால், நல்ல உடல் நலம் என்பது சாத்தியமானதே 39’ என்று சாதிக்க நினைப்பவர்களுக்கு நூலாசிரியர் வழிகாட்டுகிறார். ஒரு புதிய அனுபவ உலகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நூல்.
நன்றி: தினமணி, 2/10/2017.