எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, பக்.144, விலை ரூ.100.

குடும்ப வாழ்வில் கணவன் – மனைவிக்கு இடையிலான உறவில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகள், அவற்றிற்கான காரணங்கள் இந்நூலில் ஆராயப்பட்டிருக்கின்றன. அன்பும், காதலும் குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் எத்தனை கணவன் – மனைவிக்கிடையே அது அடிப்படையாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.

குடும்பத்தில் ஆணின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது, பெண் வீட்டு வேலைக்காரியாக உழைத்து உழைத்து மாய்ந்து போவது, பெண்ணின் கருத்துகள், உணர்வுகள் மதிக்கப்படாதது, இந்த ஆணாதிக்க குடும்ப அமைப்பைக் காட்டிக் காக்க காலங்காலமாக நிலவும் கருத்துகள் என பலவிஷயங்களைப் பற்றி இந்நூல் சொல்லும் ஆழமான விமர்சனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

குடும்ப அமைப்புக்கும் சாதிமுறைக்கும் உள்ள தொடர்பு, சாதி மீறி திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள், ஒவ்வொரு சாதிக்கும் உரிய சடங்குகள், பழக்க, வழக்கங்கள், அவற்றால் குடும்ப அமைப்பு பாதுகாக்கப்படுவது என நூலின் ஆராய்ச்சி எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

குடும்பம் ஒரு சிறையாக இருக்கக் கூடாது, ஆணும் பெண்ணும் விரும்பவில்லை என்றால் பிரிந்து வாழலாம்; கட்டாயத்தின் பேரில் இணைந்து வாழக் கூடாது என்று கூறும் இந்நூல், இன்றுள்ள குடும்பம் என்பதற்கான வரையறைகளை மாற்றி, குடும்ப அமைப்புக்கு புதிய பொருள் தர வேண்டும் என்று சொல்கிறது. இன்றைய குடும்ப வாழ்க்கையைப் பற்றிய விமர்சனரீதியான, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளின் வெளிப்பாடு இந்நூல்.

நன்றி: தினமணி, 29/1/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *