பான் கி மூனின் றுவாண்டா

பான் கி மூனின் றுவாண்டா, அகர முதல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை ரூ.120;

பத்து சிறுகதைகளின் தொகுப்பு. ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போர் அங்கு வாழ்ந்த மக்களை எவ்வாறெல்லாம் பாதித்தது, மக்களின் அன்றாட, இயல்பான வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போனது என்பதைச் சித்திரிக்கும் சிறுகதைகள்.

ராணுவம், மக்கள் மீது போர்தொடுக்கும்போது ஏற்படும் படுமோசமான தீய விளைவுகளும், நிகழும் மனிதத்தன்மையற்ற செயல்களும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் போர் இயக்கங்களின் நடவடிக்கைகள், அவற்றில் ஈடுபட்ட மனிதர்கள், அவர்கள் செய்த தியாகங்கள், அவர்களின் இழப்புகள் அதிர வைக்கின்றன. அவ்வளவு மோசமான நிலையிலும் ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு செயல்படும் சிலரின் நடவடிக்கைகள், அவர்களின் மீதான மக்களின் கோபம் என போர்க்கால வாழ்க்கை நிகழ்வுகள் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

குடும்பம், நண்பர்கள், வேலை, தொழில், வருமானம், சேமிப்பு, எதிர்கால கனவுகள் எனச் சுழலும் வாழ்க்கை, போர்ச் சூறாவளியில் சிக்கி சின்னபின்னமாகிவிடுவதை வாசிக்கும்போது, மனிதகுலம் இத்தகைய போர்களிலிருந்து எப்போது விடுபடும் என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. சிறந்த பதிவு.

நன்றி: தினமணி, 29/1/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *