ஏர்வாடியார் கருவூலம்
ஏர்வாடியார் கருவூலம், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், பக். 114, விலை 70ரூ.
கலைமாமணி ஏர்வாடியார் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இந்த நுாலின் ஆசிரியர், ஏர்வாடியாரின் படைப்புலகம் குறித்து இரு பெரும் தகுதிகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.
ஒன்று, ஏர்வாடியார் தன் படைப்புகள் மூலம் எவ்வாறு மற்றவர்களை ஈர்த்தார் என்பது. மற்றொன்று, அவர் தன் திறனாய்வுகள் மூலம் எவ்வாறு படைப்பாளிகளை ஊக்குவித்தார் என்பது. சரியாகச் சொன்னால் இந்த நுாலாசிரியரான கவிஞர் ரவியை, அவர் எவ்வாறு ஊக்குவித்தார் என்பதை நுாலை படிக்கும்போது புரிகிறது.
‘மனதில் பதிந்தவர்கள்’ பகுதியில் நுாலாசிரியர் பற்றி ஏர்வாடியார் எழுதியுள்ள கட்டுரையில்,‘குஞ்சுகள் மிதித்து கோழிகள் காயம்முதியோர் இல்லம்’ என்று சமூக சிந்தனையோடு குறிப்பிடப்பட்ட ஹைகூவை ஏர்வாடியார் எடுத்தாண்டுள்ளது, பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலானது.
‘உனக்கு எது நல்லதாக படுகிறதோ அதன்படி நடந்து கொள்’ என்ற, ஏர்வாடியாரின் அம்மா கூறிய மந்திரச் சொல்லே அவரது வெற்றிக்கு வித்தாக இருந்துள்ளது என நுாலாசிரியர் குறிப்பிட்டு, ஏர்வாடியார் வாழ்க்கையில் நடந்த சுவையான பல நிகழ்வுகளையும் நுாலில் குறிப்பிட்டுள்ளார். அவை ஒவ்வொன்றும் வாசிப்போருக்கு நல்ல அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
– வியாஸ்
நன்றி: தினமலர், 2/2/2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818