இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்
இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும், பிரேம், ரமேஷ், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 120, விலை 100ரூ.
இசைக்கும் சமூகத்துக்குமான உறவு, இசைக்கும் கலாசாரத்துக்குமான உறவு, காலந்தோறும் இசை மாறி வந்த விதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. இளையராஜாவின் இசைப் பங்களிப்பு, அவர் உருவாக்கியவை, சாதித்தவை, நாட்டுப்புற இசையை பிற இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியதற்கும் இளையராஜா பயன்படுத்தியதற்குமான வேறுபாடு, அவரின் தனித்துவம் பற்றியெல்லாம் இன்னொரு கட்டுரை சொல்கிறது.
இளையராஜா பற்றி 2002 ஆம் ஆண்டு அ. மார்க்கஸ், முன் வைத்த பார்வைகளை விமர்சனம் செய்யும் கட்டுரையும் நூலில் உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நூலாசிரியர்கள் இளையராஜாவிடம் எடுத்த நேர்காணலும் இந்நூலுக்குச் சுவை சேர்க்கிறது.
“மற்றவர்களுக்கு இசை தொழில், எனக்குத் தொழில் இல்லை. அது என்னுடைய வாழ்க்கை” என்று இளையராஜா நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.
அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைக்குப் பதில் சொல்ல வந்த நூலாசிரியர்கள், “அ.மார்க்ஸ் இன்றைய இசையமைப்பாளர்களாக யாரை வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால் இளையராஜா இசை அமைப்பாளர் மட்டும் இல்லை. அவர் ஓர் இசைக் கலைஞர், இசைப் படைப்பாளி, மாபெரும் கலைஞர்கள் சில ஆண்டுகள் செலவு செய்து பித்தநிலையில் எழுதி முடிக்கும் இசையை சில நாட்களில் எழுதி முடிக்கும் விபரீத வேகம் கொண்ட ஒரு அதிசயக் கலைஞர்” என்று தங்களுடைய கருத்தை முன்வைக்கின்றனர்.
பொழுதுபோக்கிற்கானது இசை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்நூலைப் படித்தால் இசையில் இவ்வளவு இருக்கிறதா? என்று மலைத்துப் போய்விடுவார்கள்.
நன்றி: தினமணி, 13/6/2016.