மதுரை அரசியல்
மதுரை அரசியல், ப. திருமலை, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.336, விலை ரூ.250.
மதுரையைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் ராணி மங்கம்மாளையும், காந்தியின் அரை ஆடைக்கான வரலாற்றையும் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். இந்நூலில் அவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.
நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால், தன் கண் முன்னே நிகழ்ந்த பல சம்பவங்களை அற்புதமாக விவரித்திருக்கிறார். குறிப்பாக அரசியல் கொலை, கூலிப்படை கலாசாரம் தொடர்பாக எழுதும்போது அவர்களுடைய சங்கேத வார்த்தைகளைக் கூட எழுதியிருக்கிறார்.
மதுரை ஆலயப் பிரவேசம், கக்கன் வரலாறு குறித்த பதிவுகள் அருமை. மௌலானா சாகிப், சொர்ணத்தம்மாள், தூக்குமேடை பாலு, மாயாண்டி பாரதி, என்.எம்.ஆர். சுப்பராமன் உள்ளிட்ட தியாகிகளை மதுரையின் இன்றைய இளையதலைமுறைக்கு அடையாளப்படுத்தும் ஆவணமாக இந்நூல் மலர்ந்துள்ளது.
இவை தவிர, பல தலைவர்களுடன் தொடர்புடைய மதுரை அரசியல் நிகழ்வுகள், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் மதுரை சார்ந்த வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
பெருங்காமநல்லூர் கலவரம், மொழிப் போர், டெசோ மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை, மதுரை மண்ணைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சான்று.
நன்றி: தினமணி, 13/6/2016.