பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு
பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, வெ.சாமிநாத சர்மா, இலக்கியச் சோலை, பக்.80, விலை ரூ.60
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய, ஐரோப்பிய சக்திகளால் தொடங்கி வைக்கப்பட்டது பாலஸ்தீனப் பிரச்னை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனத்தில், உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து யூதர்களைக் கொண்டு வந்து குடியமரச் செய்தார்கள். குடியேறிய யூதர்கள் சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கினர். அவர்களின் உரிமைகளைப் பறித்தனர். இழந்த உரிமைகளையும் நிலங்களையும் பெறுவதற்காக பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்தப் பிரச்னையை 75 ஆண்டுகளுக்கு முன்பே நூலாசிரியர் வெ.சாமிநாத சர்மா அலசி ஆராய்ந்திருக்கிறார்.
பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற்றம், அதனால் அதிகரித்த யூதர்களின் மக்கள் தொகை, ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகள் வகுத்த திட்டங்கள், பால்பர் பிரகடனம் என அனைத்தையும் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் நூலாசிரியர் வழங்கியுள்ளார்.
“இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானதோ, பிரான்ஸ் எவ்வாறு பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமானதோ அதே போன்று பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. அரேபியர்களிடையே யூதர்களைக் கொண்டு புகுத்துவது மனிதத்தன்மையற்ற செயல். பெருந்தன்மை வாய்ந்த அரேபியர்களை அடக்குவது என்பது மனித சமூகத்துக்கு இழைக்கின்ற ஒரு குற்றமாகும்’ என்ற நூலாசிரியரின் வரிகளைப் படிக்கும்போது ஆதிக்க நாடுகளின் மீது ஒரு சமூக அக்கறை மிகுந்த எழுத்தாளன் கொண்டிருந்த சினம் சரியே என்பதை உணர முடிகிறது.
நன்றி: தினமணி, 13/6/2016.