இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள்
இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், பக். 160, விலை 125ரூ.
2012-2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி, சொல்வனம் வலைப்பின்னல் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
பனை, சந்தனம், யூகலிப்டஸ், செம்மரங்கள் குறித்த பல்வேறு வகையான செய்திகளை சங்க காலம், தொட்டு தற்காலம் வரை புள்ளி விவரங்களுடனும், அறிவியல் பூர்வமாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், இயற்கையோடு ஒன்றி மனிதன் வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
1972-இல் பிரேசிலில் தொடங்கியு புவி உச்சிமாநாட்டின் முதல் சுற்று பேச்சுவார்த்தையிலிருந்து 2014ஆம் ஆண்டு லைமாவில் முடிவுற்ற 20 ஆவது சுற்று வரை சுற்றுச்சூழலில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கிறார் நூலாசிரியர். இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் பொருட்டு புவியியல் அடிப்படையில் பாலை, மத்திய இந்தியா, இமயமலைப் பிராந்தியங்கள், சிந்து – கங்கை சமவெளி, கடற்கரை என 5 மண்டலமாக பிரித்து பல்வேறு ஆலோசனைகளை அழுத்தம் திருத்தமாக இந்நூல் முன்வைக்கிறது.
கஞ்சாவிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் துரோணாபினால், நபிலோன் மருந்துகள் அமெரிக்காவில் புற்றுநோய்க்கும், எயிட்ஸுக்கும் நிவாரணமாக பயன்படுத்தப்படுவதை முன்னுதாரணமாகக் குறிப்பிட்டு, கண்காணிப்புடன் கூடிய மூலிகை வாரியம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.
சுற்றுச்சுழல் தொடர்பாக முழுமையான, புள்ளி விவரங்களுடன் கூடிய அரிய நூல்.
நன்றி: தினமணி, 13/6/2016.