காஷ்மீர் இந்தியாவுக்கே
காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ.
இந்திய பாகிஸ்தான் பகைக்கு முக்கிய காரணமே காஷ்மீர் பிரச்னைதான். இதை வைத்துத்தான் இந்தியா மீது நேரடியான மற்றும் மறைமுகமான போர்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
இந்த காஷ்மீர் பிரச்னை எப்படி உருவானது, இது தொடர்பான இந்திய தரப்பு நியாயங்கள் என்ன, இதில் பாகிஸ்தானின் சதித்திட்டங்கள், அத்துமீறல்கள், ஆக்ரமிப்புகள், போர்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இந்திய அரசியல்வாதிகளின் தவறுகள், பிரிட்டிஷாரின் தந்திரங்கள், ஐ.நா.சபை விவாதங்கள், அதன் தீர்மானங்கள், ஆர்ட்டிகிள் 370… முதலான பல்வேறு விஷயங்களை இந்நூலாசிரியர் உரிய ஆதாரங்களோடு இந்நூலில் விவரித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்நூலாசிரியர், பாகிஸ்தானுடனான போர்களில் பங்கேற்று, கேப்டனாகி, 1993ல் விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் நமது ராணுவத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், ஹிந்து சமயத்தைப் பற்றியும் ஆராய்வு பூர்வமான பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூலை நான்கு பாகமாகப் பிரித்து பல்வேறு கட்டுரைகளில் காஷ்மீர் பிரச்னையை முழுமையாக விவரித்துள்ளார்.
இதில் பாகிஸ்தானுடனான போர்களில் இந்திய ராணுவத்தினரின் போர்த்திறமைகளையும், சாகசங்களையும், தியாகங்களையும், போர்க்களத்தில் நடந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களையும், பாகிஸ்தானை வெற்றி கொண்டதையும், விளக்கியுள்ள விதம் காணொலிக் காட்சிபோல் உள்ளது.
அதேசமயம், போரின்போது எல்லைப் பகுதியில் வாழ்ந்த சில முஸ்லிம்கள் புரிந்த துரோகச் செயலை வைத்து, இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற கருத்தும், இந்நூலில் சில இடங்களில் வெளிப்படுகிறது. இக்குறையைத் தவிர, இந்நூல் நிறைவாகவே உள்ளது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 27/1/2016.