அப்துல் கலாம் சாதிக்கலாம்

அப்துல் கலாம் சாதிக்கலாம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 176, விலை 140ரூ.

‘பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற தனது கூற்றுக்கு, தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்.

படகோட்டியின் மகனாகப் பிறந்து பாரதத்தின் முதல் குடிமகனாக உயர்ந்த இந்த மாபெரும் தலைவர், தன் நலன் கருதாது தேச நலனையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். தனது மறைவால் தமிழகத்தை மட்டுமன்றி, பாரதத்தின் குக்கிராமம் வரை பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி சரித்திரம் படைத்தவர்.

அப்துல் கலாம் எப்படி உலகம் வியக்கும் விஞ்ஞானியாக, அறிவியல் பேராசிரியராக, எழுத்தாளராக, இளைஞர்களையும், மாணவர்களையும் எழுச்சியுற வைக்கும் நாவன்மை மிக்கவராக, தன்னம்பிக்கை நாயகனாக, நிர்வாகத் திறன், ஊழல் இன்மை, நேர்மை போன்றவற்றுக்கு உதாரணப் புருஷராக, பாரத ரத்னா உள்பட பல உயரிய விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவராக, நன்றியுணர்வு மிக்கவராக விளங்கினார்.

மேலும், மதபாகுபாடு அற்றவராக, ஏழை எளியவர்களிடமும், மாணவர்களிடமும் அன்பு பாராட்டுபவராக, வெளிநாட்டுத் தலைவர்களின் பாராட்டை பெற்றவராக, குடியரசு தலைவர் உள்பட பல உயரிய பதவிகளை வகித்தார். தனக்கென்று எந்தவொரு சொத்தும் சேர்க்காது தன் உடைமைகளை வெறும் இரண்டு சூட்கேஸூகளுடன் சுருக்கிக் கொண்டார் என்பன போன்ற பல்வேறு சிறப்புக்கான தகவல்களை அரிய புகைப்படங்களுடன் தொகுத்து, இந்நூலில் சுமார் 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

சாதிக்க நினைப்பவர்கள், அப்துல் கலாமை பின்பற்றினால் வெற்றி பெறலாம் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 27/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *