இலக்கிய முத்துக்கள் 20
இலக்கிய முத்துக்கள் 20 (என் வாசிப்பின் வாசம்), ஜெ.பாஸ்கரன், அர்ஜுன் ராம் பப்ளிகேஷன்ஸ், பக்.184, விலை ரூ.200.
தமிழின் புகழ்பெற்ற இருபது படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த விரிவான அறிமுகமாக மலர்ந்திருக்கிறது இந்நூல். அசோகமித்திரன், கி.ரா., ந.பிச்சமூர்த்தி, ஆ.மாதவன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., சுந்தரராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் உள்ளிட்ட தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளைப் பற்றிய அருமையான பதிவாக மலர்ந்திருக்கிறது இந்நூல். இவர்களிலிருந்து சற்றே வேறுபடும் சுஜாதா, பாக்கிய ராமசாமி, ரா.கி.ரங்கராஜன், பரணிதரன், தேவன் ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும் பேசுகிறது.
ஒரு படைப்பாளி, அவர் எழுதிய பல்வேறு படைப்புகள், அவை சித்திரிக்கும் உலகங்கள், அவை பற்றிய நூலாசிரியரின் கண்ணோட்டம் என விரிகிற இந்நூல், சுகமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. படைப்பாளிகளைப் பற்றிய நூலாசிரியரின் விமர்சனப்பூர்வமான பதிவாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது.
“எதையும் மிகைப்படுத்தியோ, அதிக ஆரவார அலங்காரங்களுடனோ எழுதுவது அவர் பாணியல்ல. அவர் எழுத்துகளும் அவரைப் போலவே எளிமையானவை’ என்ற அசோகமித்திரனைப் பற்றிய நூலாசிரியரின் மதிப்பீடு, “அவரது விமர்சனங்கள் எப்போதுமே நடுநிலையோடு, கொஞ்சம் கடுமையாகவே இருக்கும். தமிழ் இலக்கியம் குறித்த விசாரம் சார்ந்தது அது’ என்ற சுந்தரராமசாமியின் விமர்சனங்கள் குறித்த நூலாசிரியரின் பார்வை ஆகியனவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
தமிழ் படைப்பிலக்கிய உலகில் புதிதாகப் பயணிக்கிறவர்களுக்கு வழிகாட்டியாகவும், ஏற்கெனவே பயணித்தவர்களுக்கு சுவையான இலக்கிய வாசிப்பு அனுபவமாகவும் இந்நூல் திகழ்கிறது.
நன்றி: தினமணி, 14/2/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818