இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம், சிகரம் ச செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், பக்கம் 520, விலை 520ரூ.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற பல வழக்குகளை நடத்தி வெற்றி பெற்ற இந்நூலாசிரியர் இலக்கிய உலகிலும் சிகரம் செந்தில்நாதன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். தமிழ் இலக்கியத்திற்கு இதுவரை 30 நூல்களை இயற்றியுள்ளார். தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி பலரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை தொகுத்துள்ளார்.
இந் நூலின் முகப்புக் கட்டுரையில் கட்டுரையிலே தொன்மையான நாகரிகத்திற்கும் பண்பாட்டுக்கும் உரிய இந்தியாவில் வடக்கே சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் தெற்கே திருவள்ளுவரின் திருக்குறளும் எவ்வாறு அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டு நிலைகள் வேரூன்ற உதவின என்பதை குறிப்பிடுகிறார் . அதேபோல் முகலாயர் ஆட்சி காலம்முதல் நாடு சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலம் வரை நம் நாட்டில் இருந்த சட்டங்கள் குறித்த குறிப்புகளையும், பிறகு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசமைப்புச் சட்டம் எப்படி உருவானது ? என்ற விபரமும் அக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு நமது அரசியலமைப்புச் சட்டம் எந்தெந்த வகையில் வகுக்கப் பட்டுள்ளன என்பதை இருபத்தி இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் அதற்கான விளக்கங்கள், விமர்சனங்கள், தீர்ப்புகள் போன்றவற்றை இந்நூலில் தெளிவுபட விளக்கியுள்ளார் ஆசிரியர். பகுதி ஒன்றில் இந்திய ஒன்றியமும் அதன் எல்லைகளும் என்ற தலைப்பில் இந்தியா 28 மாநிலங்களையும் 8 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது என்றும் இந்தியா என்பது ஒன்றியம் மாநிலங்களில் கூட்டாட்சி அல்ல என்றும் அதனால் எந்த மாநிலமும் இந்திய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல முடியாது என்றும் கூறி அதற்கான விளக்கங்களை எடுத்துரைக்கிறார்.
இப்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள குடியுரிமை அடிப்படை உரிமைகள் வழிகாட்டும் நெறிகள் அடிப்படை கடமைகள் என்று 22 பகுதிகளும் இந்நூலில் முழுமையாக விளக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இவை குறித்து எழுந்த விமர்சனங்களும் விளக்கங்களும் அதற்கான தீர்வுகளும் இந்நூலில் எளிய தமிழ் நடையில் தொகுக்கப்பட்டுள்ளன. சட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு மட்டுமல்ல அது குறித்து அறிய விரும்புபவர்களும் இந்நூல் மிகவும் பயன்படும் என்பது திண்ணம்.
பரக்கத்
நன்றி: துக்ளக், 18 8 2021.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818