இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்
இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.160, விலை 140ரூ.
பிரபல எழுத்தாளரும், மாற்று மதத்தைச் சார்ந்தவருமான இந்நூலாசிரியர், இஸ்லாம் குறித்த சில நூல்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாமிய மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்கள் புரிந்த சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நல்லாட்சி புரிந்துள்ளார்கள். அதேபோல் ஆங்கில ஆட்சியை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடியவர்களிலும் இஸ்லாமியர்களின் பங்கு கணிசமானது.
சுதந்திரத்துக்குப் பின் இந்திய மண்ணை மணம் வீசச் செய்யும் செயலில் ஈடுபட்டு வருவதிலும் இஸ்லாமியர்கள் சளைத்தவர்கள் இல்லை. இவற்றையெல்லாம் இந்நூலின் மூலம் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
அந்த வகையில் இஸ்லாமியராக இருந்தாலும் குணங்குடி மஸ்தான், ஒரு சித்தரைப் போன்று துறவறம் பூண்டு, ஹிந்து மதத்தினருக்கும் கூட ஆன்மீகத்தைப் போதித்த விபரத்தை அவர் குறித்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அரசர்களாக அக்பர், முகமது பின் துக்ளக், ஔரங்கசீப், சுதந்திரப் போராட்ட வீரராக காயிதே மில்லத், குடியரசுத் தலைவராக பக்ரூதீன் அலி அஹமது, ஜாகீர் உசேன், அப்துல் கலாம், நல்லிணக்க வாதியாக அபுல்கலாம் ஆஸாத்… இப்படி எழுத்தாளர், விஞ்ஞானி, சீர்திருத்தவாதி, ஆளுநர், கட்டிடக் கலை நிபுணர், பொருளியலாளர், வள்ளல், பாடலாசிரியர், இசைமுரசு… என்று பல்வேறு துறைகளிலும் பிரகாசித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த, இஸ்லாமிய மாமணிகள் 28 பேரின் வரலாற்றுச் சாதனைகளை இந்நூலில் அறிய முடிகிறது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 12/9/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027189.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818