இந்தியாவின் இருண்ட காலம்
இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்குப் பதிப்பகம், விலை 350ரூ.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தவிர, இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியிருப்பதோடு, உலகம் அறிந்த பேச்சாளராகவும் திகழ்பவர்.
இவர், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த ‘An Era of Darkness’ என்ற இந்நூல், வாசகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றதால், தற்போது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.
பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சியின் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளையும் நாம் மறக்க முடியாது. பல கொடுமையான மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது, பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது, ரயில்வே துறை, நாடாளுமன்ற ஜனநாயகம், நிதிமன்ற நடைமுறைகள், சுதந்திரமான ஊடகம், ஆங்கில மொழி போன்ற நன்மைகளும் அதில் அடக்கம்.
ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் இந்திய மக்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி, இந்தியாவின் வளங்களையும் செல்வங்களையும் சுரண்டி கொள்ளையடித்து, இந்தியாவை சீரழித்தது என்பதையும், சரித்திர காலத்தில் உலகின் மிகச் சிறந்த நாடாகத் திகழ்ந்த இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியில் எப்படி பின்தள்ளப்பட்டது என்பதையும் ஏராளமான வரலாற்றுச் சான்றுகளுடனும், நியாயமான விவாதங்களுடனும் இந்நூலில் 8 அத்தியாயங்களில் விவரித்துள்ளார் ஆசிரியர். இந்தியாவுக்கு பிரிட்டிஷார் இழைத்த அநீதிகளை அம்பலப்படுத்தும் இந்நூலை, ஒவ்வொரு இந்தியரும் படித்தறிவது அவசியம்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 22/8/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/Indiavin_Irunda_Kaalam.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818