இப்படித்தான் ஜெயித்தார்கள்
இப்படித்தான் ஜெயித்தார்கள், ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள், மோ.கணேசன், பாரதி புத்தகாலயம், பக்.239, விலை ரூ.230.
“அப்போது எங்கள் வீட்டில் கேட்பதற்கு வானொலி பெட்டி கூட இல்லை’ என்கிறார் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத். பள்ளித் தேர்வில் நான்கு முறை தோல்வி அடைந்ததை சிரித்துக் கொண்டே கூறுகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். சென்னை வந்த மூன்றே மாதத்தில் வீடு வாங்கினேன்- அப்போது எனக்கு வயது 15 என நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார் ஓவியர் ஸ்யாம்.
இதேபோன்று மணல் மாஃபியாக்களுக்கு முடிவு கட்டிய அமுதா ஐஏஎஸ், சிறு வயதில் தேநீர் குவளை கழுவி இன்று 30 உணவகங்களின் உரிமையாளராக இருக்கும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி ரா.தமிழ்ச்செல்வன், வாழ்வில் தாம் பட்ட இன்னல்களையும் நகைச் சுவையுடன் கூறும் பேராசிரியர் சாலமன் பாப்பையா, வெறும் 500 ரூபாயோடு மும்பைக்குச் சென்று இன்று 3,600 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும் தைரோ கேர் வேலுமணி என வாழ்வின் கடைநிலையில் இருந்து போராடி ஜெயித்த 20 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்து தன்னம்பிக்கை வளர்க்கும் பக்கங்களாக வழங்கியிருக்கிறார் நூலாசிரியரும் பத்திரிகையாளருமான மோ.கணேசன்.
ஒரு விஞ்ஞானியின் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு குறித்து விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும் விஷயங்கள் வாசகர்களுக்கு நிச்சயம் சிலிர்ப்பை ஏற்படுத்தும். “எளிமையாக இருப்பவன் எப்போதும் கஷ்டப்படமாட்டான். எனவே, உங்கள் குழந்தைக்கு எளிமையாக இருக்கக் கற்றுக் கொடுங்கள்’ என தைரோ கேர் வேலுமணி விடுக்கும் வேண்டுகோள் பெற்றோருக்கான விலை மதிக்க முடியாத விழிப்புணர்வு வாசகம். எப்போதும் நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் ஆயுள் முழுக்க நீக்கமற நிறைந்தே காணப்பட வேண்டுமெனில், அதற்கு இந்த நூல் வழிகாட்டும்.
நன்றி: தினமணி, 11/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000032815_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818