ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு
ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு, த. சிவக்குமார், அய்யா நிலையம், பக். 224, விலை ரூ.220.
அறவழிப்பட்ட சமுதாயமோ, சமூகமோதான் சிறப்பானதாகக் கருதப்படும். ஆகவேதான், ஐம்பெருங்காப்பியங்களை இயற்றிய ஆசிரியர்கள் அவரவர் சார்ந்த சமயம், மதம் குறித்த அறக்கோட்பாடுகளை தங்கள் காப்பியங்களில் இடம்பெறச் செய்து மக்களை நல்வழிப்படுத்தினர்.
காப்பியங்களில் உள்ள அறக்கூறுகளை, ஐம்பெருங் காப்பியங்களின் அமைப்பும் நோக்கமும் சமூக அறங்கள், சமய அறங்கள், அறக்கோட்பாடுகளும் தீர்வும் ஆகிய நான்கு இயல்களின் மூலம் இந்நூல் எடுத்துரைக்கிறது.
ஐம்பெருங் காப்பியங்களில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நால்வகை உறுதிப் பொருள்களும் உள்ளன. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக மணிமேகலை உள்ளதால், இவ்விரண்டும் ஒரே குடும்பத்தின் கதையையும், பெளத்தமத அறக்கோட்பாடுகளையும் வலியுறுத்துகின்றன.
சமண காப்பியமான சீவக சிந்தாமணியில் (வடமொழி நூலின் தமிழாக்கம்) சமண சமய அறக்கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. வளையாபதியின் காப்பிய நோக்கம் சாதி ஒழிப்பு, பெண்மையைப் போற்றுதல், அறம், புலால் மறுத்தல், கொல்லாமை, நிலையாமை முதலியவற்றை வலியுறுத்துவதாகும்.
குண்டலகேசி, பெளத்தம் சார்ந்த காப்பியம். அச்சமயத்திற்குப் பெரும் பகையாக இருந்த சமண சமயக் கொள்கைகளைக் கண்டிக்கும் சொற்போர் நூலாக இது உள்ளது.
பெண்மையைப் போற்றுதல், களவின்மை, தீயொழுக்கம் நீக்குதல்(சூது), துறவு ஆகிய நான்கு விதமான நோக்கத்தைக் குண்டலகேசி கொண்டுள்ளது. கற்பு, அன்பு, அருள், மக்கள் நலன், பசிப்பிணி நீக்குதல், மனிதநேயம், கள்ளாமை, கொல்லாமை, வாய்மை, விரதம் காத்தல், விருந்தோம்பல், ஒருமைப்பாடு, கல்வி தருதல், குளம் வெட்டுதல், கோயில் மேம்பாடு, குடிமக்கள் காத்தல், ஒழுக்கம், போர் நெறி, கல்வி முதலிய அறக்கோட்பாடுகளையே ஐம்பெருங்காப்பியங்கள் வலியுறுத்துகின்றன.
ஐம்பெருங்காப்பியங்களில் காணப்படும் அறக்கோட்பாடுகளை ஆராய்ந்து தெளிவாக எடுத்துரைக்கும் நூல்.
நன்றி: தினமணி,4/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818