கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும், ந.அறிவரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.236, விலை ரூ.200.

சங்கப் பாடல்களில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர்தான். அவர் தம்முடைய பாடல்களில் இயற்கை சூழல், இயற்கைக் காட்சிகள், இயற்கையோடு இயைந்த மக்களின் வாழ்க்கைமுறை போன்றவற்றையே பெரிதும் காட்சிப்படுத்துவார். குறிஞ்சிக் கபிலரான அவரை, “இயற்கைக் கவிஞர்’ என்றும் போற்றலாம் என்கிறது இந்நூல்.

கபிலரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, கபிலரின் படைப்பும் பாடுபொருளும், கபிலரின் பாடல்களில் மொழிநடை ஆகிய மூன்று உட்தலைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியில் கபிலரின் பிறப்பு, குலம், பெயர்க் காரணம், அவரது காலம், சமயம் ஆகியவை விரிவாக அலசப்படுகின்றன.

கபிலர் காலத்தை வரையறுக்க அகச்சான்று, புறச்சான்று, கல்வெட்டுச்சான்று, திருக்கோவிலூர் கபிலர் குன்று முதலான சான்றுகளைக் கொண்டு குறிஞ்சிக் கபிலர் யார் என அடையாளப்படுத்துகிறார் நூலாசிரியர். இரண்டாவது பகுதி, சங்க இலக்கியங்களில் காணப்படும் கபிலர் பாடல்களில் அகமும் புறமாக உள்ள பாடல்கள் எத்தனை என்பதை வரையறுக்கிறது.

கபிலரின் பாடல்களில் சில சொற்கள் ஒலி மாறுதல்களை அடைகின்றன என்றும், அவற்றுள் சில ஒலிகளின் முயற்சியில் வேறு ஒலிகளுக்குரிய முயற்சியும் உடன்சேர்தல் உண்டு என்றும் கூறும் நூலாசிரியர், சில சொற்களை அதற்கு உதாரணங்களாக எடுத்துக்காட்டியுள்ளார். மேலும், எதுகை-மோனைகள், முரண் தொடைகள், வண்ணங்கள், எதிரொலிச் சொற்கள், படிகம், உருவகம், அடைமொழி, உவமை, உள்ளுறை, வருணனை முதலியவற்றை எடுத்துரைக்கிறார்.

கபிலரின் பாடல்களில் உள்ள மொழிநடை குறித்த ஆய்வில், கபிலரின் சொல்லாட்சி, உத்தி, ஒலிக்கோலம், தொடரமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்து கபிலரின் மொழி நடையில் உள்ள தனித்தன்மை எடுத்துரைக்கப்படுகிறது.

நன்றி: தினமணி, 10/1/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *