கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள்

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும் தேன்மொழி, மணற்கேணி பதிப்பகம், விலை 100ரூ.

கலைகள் குறித்த உணர்வும் அறிவும் அக்கறையும் இல்லாத சமுதாயம் தன் மனதையும் முகத்தையும் அழித்துக்கொள்கிறது. பண்டைய சமுதாயத்தின் பண்பாட்டு ஆவணங்களான அவை பேணப்படுவதுடன் ஆராயப்படவும் வேண்டும்.

இன்று தனியாரும் கல்விப்புலங்கள் சார்ந்த பலரும் ஆய்வுகளில் ஈடுபட்டாலும் ஆய்வை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான ஆய்வு அணுகுமுறை சார்ந்த நூல்களும் கோட்பாடு சார்ந்த நூல்களும் மிகமிகக் குறைவாகவே உள்ளன. இக்குறை களையப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவாக, கலையியல் துறை அறிஞர் மூவரின் நான்கு ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தேன்மொழி.

‘முற்கால பௌத்தக் கலையில் காட்சி சித்திரிப்பு முறை’ என்ற வித்யா தெஹேஜியாவின் கட்டுரை, ‘இந்தியக் கலைகளை ஆராய்வதற்கான புதிய அணுகுமுறை’ என்ற ஜான் எஃப் மோஸ்டெல்லரின் கட்டுரை, இந்தியக் கலை மற்றும் கட்டிடக் கலை ஆய்வுக்குக் கல்வெட்டுத் தரவுகளின் பயன்பாட்டை விளக்கும், கர்நாடகத்துக்கு சமணம் வந்தது முதல் இன்றும் அன்றாட வாழ்வின் சமூக மதமாக அது எப்படிப் பின்பற்றப்படுகிறது என்று சொல்லும் கே.வி.ரமேஷின் இரண்டு கட்டுரைகள் என்று மிகச் செறிவாக எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளையும் அதன் சாரம் குறையாமல் இலகுவான நடையில் மொழிபெயர்த்துள்ளார் தேன்மொழி.

கலை வரலாற்றை ஆராயும் புதிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்தும் இந்த நூல், ஏராளமான புகைப்படங்களையும் வரைபடங்களையும் ஆசிரியர்கள் குறித்த விரிவான தகவல்களையும் கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கலை வரலாற்று ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்நூல் புதிய பார்வையை வழங்கும்.

– கா.பாலுசாமி

நன்றி: தி இந்து, 24/11/18.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *