கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்
கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 350ரூ.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நாடறிந்த தலைவர். நல்ல பேச்சாளர். சீரிய சிந்தனையாளர். டாக்டர் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளர். அவரைத் தம் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தச் செய்ய அனைவரும் விரும்புகின்றனர். அவர்கள் அழைப்பை ஏற்று பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
கல்லூரி அரங்கங்களில் மாணவர்கள் வினாதொடுப்பதும், கி.வீரமணி விடை நல்குவதும் அறிவார்ந்த நிகழ்வாகும். மேலும் இச்சொற்பொழிவுகளில் பாடத்திட்டம், அறிவியல் மனப்பான்மை, மாணவர்கள் கட்டுப்பாடு, பெண்ணுரிமை, பகுத்தறிவு, சமூக நீதி, வரலாறு, மொழி, இலக்கியம், ஆராய்ச்சி என்று பல்வேறு முத்துக்கள் ஒளிவீசுவதை படிப்பவர்கள் உணரலாம்.
“தகுதியில்லை, திறமையில்லை, நம்மால் முடியாது, நம்முடைய தலையெழுத்து அவ்வளவுதான், அன்றைக்கு எழுதியவன் எழுத்தை அழிக்க எவனால் முடியும் என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள், எங்களால் முடியும், அதை மாற்றிக்காட்ட முடியும் என்று சொல்லக்கூடிய தன்னம்பிக்கையின் சிகரத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்” என்று மாணவ – மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் கி.வீரமணி. இந்நூல் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டி.
நன்றி: தினத்தந்தி, 14/9/2016.